உக்ரைனில் போராடும் இலங்கையர்கள் பற்றி ஏன் பேசுவதில்லை?: ஊடகவியலாளர்களிடம் ஆதங்கப்பட்ட ரசிய தூதுவர்
.
உக்ரைனுக்காக போராடும் இலங்கையர்களைப் பற்றி நீங்கள் ஏன் கேள்வி கேட்பதில்லை? என இலங்கைக்கான ரசிய தூதுவர் லெவன் ட்ஜகார்யன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவை பற்றி மட்டுமே கேட்கிறீர்கள், உக்ரையின் குறித்து அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரசியாவில் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதன்போது பதிலளித்து பேசிய அவர்,
இந்த முக்கியமான விடயத்திற்கு தீர்வு காண்பதற்காக தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இணைந்து பணிகளை செய்து வருகின்றோம்.
குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உக்ரைனுக்காக போராடும் இலங்கையர்களைப் பற்றி நீங்கள் ஏன் கேட்பதில்லை? ரஷ்யாவை பற்றி மட்டுமே கேட்கிறீர்கள், உக்ரையின் குறித்து அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் போராடும் இலங்கையர்கள் பற்றி நீங்கள் உங்கள் கேள்வியை புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு அனுப்பலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.