உடைக்க முடியாது எனத் தெரிந்தும் ஏன் ஒட்ட வைக்க முயற்சிக்கிறீர்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி!
இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் பலம், பலவீனம் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்,

தமிழ்நாடு முதலில் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்றுக்கொண்டு விட்டு, தற்போது பின்வாங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (மார்ச் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவையில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக முதலில் தெரிவித்துவிட்டு, தற்போது பின்வாங்குவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது எக்ஸ் பக்கத்தில், "உடைக்கப்படாததை சரிசெய்ய முயற்சிக்காதீர்கள். தமிழ்நாட்டு வழங்கும் கல்வி முறையை தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கிறது. தேசிய கல்விக் கொள்கை (NEP 2020), மொழிப்பிரச்சினை தமிழ்நாட்டின் நிலைபாடு மீதான தாக்குதல் என்பது தவறாக வழிநடத்துவது மட்டுமல்ல. ஒரு மிகப்பெரிய பிம்பத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. இது தமிழ் மொழி பற்றியது மட்டுமல்ல, பல தசாப்தங்களாக முயற்சி மற்றும் சோதனை செய்யப்பட்டு, வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட ஒரு கல்வி முறை குறித்தது.

தமிழ்நாடு மாநில வாரியக் கல்வி முறை (State Board) மூலம், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து சிறந்த முடிவுகளை தந்து வருகிறது. மனப்பாடம் செய்வதற்கு பதிலாக, கருத்து அடிப்படையில் படிக்க கவனம் செலுத்தியது தான், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் தொழில் துறைகளில் சிறந்து விளங்க தலைமுறை தலைமுறையாக மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மக்களின் தேவைக்கு மதிப்பளிப்போம்:
மொத்தம் 58,779 பள்ளிகளில் 1,09 கோடி மாணவர்கள் மாநில வாரியப் பள்ளியில் கல்வியைத் தொடரும் அதேவேளையில், 1,635 சிபிஎஸ்சி பள்ளிகளில் வெறும் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றனர். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சிலர் கூறுவது போல, மூன்றாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற தேவை இருந்திருந்தால், அவர்கள் ஏன் மாநில வாரிய பள்ளியை தொடர்ந்து தேர்வு செய்யப் போகிறார்கள். ஆகையால், மக்களின் தேர்வை புரிந்து கொண்டு மதிப்போம்.
ஏற்கனவே, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலம் உள்ளது. இது உலகளாவிய வாய்ப்புகளைப் பெருவதை உறுதி செய்கிறது. தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது பாரம்பரியத்தின் வேர்கள், வரலாறு மற்றும் மதிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
நமது பெருமைக்கான தமிழ் மற்றும் உலக வழிகாட்டியாக ஆங்கிலம், நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதை ஆகும். ஆங்கில வழி பள்ளிகளில் கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாக கற்று அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும் போது, மூன்றாம் மொழி தேவையில்லை.
நான் மத்தியமைச்சரிடம் கேட்கிறேன், தமிழ்நாட்டின் கல்வி முறை மூலம் ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப் படுத்த வேண்டும்? தேசிய கல்விக்கொள்கையை விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும் ஒரு மாடல்?
இது மொழி பற்றி மட்டுமல்ல; முடிவுகளை வழங்கும் ஒரு கல்வி முறையை பாதுகாப்பது குறித்தது. தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் சமரசம் செய்யாது. தயவு செய்து சிறப்பாக உள்ள ஒரு அமைப்பை சீர்குலைக்காதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் அவரது எக்ஸ் தளத்தில், "திமுகவின் எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ ஒப்புதல் அளித்துவிட்டு, தற்போது நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2024 மார்ச் 15 வெளியிட்ட கடிதம் உள்ளது.
அரசியல் லாபத்திற்காக எதிர்ப்பு:
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாடு முதலமைச்சரும் எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், உண்மை உடையும் போது தட்டிக்கேட்பதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது. மொழிப் பிரச்னையை திசைதிருப்பும் யுத்தியாகப் பயன்படுத்தி, வசதிக்கேற்ப உண்மைகளை மறுப்பது, அவர்களின் ஆட்சி மற்றும் நிர்வாக பற்றாக்குறையை ஒருபோதும் காப்பாற்றாது.
புதிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? நிச்சயமாக திமுகவின் அரசியல் லாபத்திற்காகத்தான். திமுகவின் இந்த பிற்போக்குத்தனமாக அரசியல், தமிழ்நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கும், மாணவர்களுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும். தேசிய கல்விக்கொள்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் அரசியல் பார்வையோடு பார்க்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட்டுவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை தாருங்கள்," எனப் பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார்.
திடீர் மாற்றம் ஒன்றும் இல்லை:
நேற்று அதற்கு பதிலளித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது எக்ஸ் தளத்தில், "மத்திய அமைச்சரே தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் உண்மையை மாற்ற முடியாது. வெற்றிகரமான கல்வி மாடலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், தமிழ்நாடு தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கையை (NEP - 2020) எதிர்த்து வருகிறது.
எங்களது 'நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்' ஒன்றும் இல்லை. 2024 மார்ச் 15ஆம் தேதி எழுதிய கடிதத்தில் கூட, தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாகக் கூறவில்லை. தமிழ்நாடு ஆரம்பம் முதலே தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்துதான் வருகிறது. எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் தமிழ்நாடு அரசு குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில்லை. அது மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்றபோது மட்டுமே, மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துகிறோம்.
தமிழ்நாடு கல்வியில் தொடர்ந்து நிரூபித்துள்ளது:
மேலும், அக்கடிதத்தில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவின் பரிந்துரைப்படி, திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். ஒருவர் கல்வியில் அரசியல் செய்கிறார்கள் என்றால், அது புதிய கல்விக் கொள்கையைத் திணித்து, தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சிதைக்க முயல்பவர்கள் தான்.
தமிழ்நாட்டின் கல்வி மாடல் முன்மாதிரியானது. அதாவது, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் பலம், பலவீனம் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அதுதான் எங்களுக்குத் தேவை. தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து, ஆதரிப்பதன் மூலம் தான், நீங்கள் உண்மையாகவே அவர்களுக்கு நன்மை செய்கிறீர்கள்," எனப் பதிவிட்டுள்ளார்.