கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அப்பாவி 5 மாணவர்களை ; ஏன் கொன்றார்கள்.! ?
.
2006ம் வருடம் மாலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை திருகோணமலை ஒரு திகிலான அனுபவத்தை சந்தித்தது.
அதே இடங்களில் எம் நண்பர்களில் பலர் இருந்தார்கள் எத்தனையோ சாட்சிகள் இருந்தது.
கடற்கரையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த அப்பாவி 5 மாணவர்களை, எந்த அர்த்தமும் இல்லாமல் வெறித்தனமாக கொன்றது இலங்கை இராணுவம்.
அதி காலையில் வைத்தியசாலையில் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட அந்த உடல்களைப் பார்த்தது நான் இறக்கும் வரை மறக்காது.
அன்று முழு நகரமும் பேரதிர்ச்சியில் மூழ்கிப்போயிருந்தது, அதன் பின் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் இறுதிச் சடங்கு இடம்பெற்றது.
இதன் பின்னர் நீதி கேட்ட பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள், இந்த கொலை நிகழ்ந்து 31வது நாள் நிகழ்வில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெளத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த எம் அன்பின் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை முன் எடுத்துச் சென்ற பெற்றோரில் ஒருவரான வைத்தியர் மனோகரன் அவர்கள் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
சென்ற வருடம் இந்த வழக்கின் நிலையும் அடுத்த கட்டமும் தொடர்பாக மீண்டும் சர்வதேச மன்னிப்பு சபையிடம் பேசியிருந்தேன்.
மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச , ஹொட்டகதெனிய என்று இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பட்டியல் நீழ்கிறது.
கடற்படையினர் சிலர் கைதாகி போதிய சாட்சியம் இல்லை என்று விடுதலையாகியிருந்தனர்.
இலங்கை அரசின் கொலைகள் ஆயிரக்கணக்காக இருந்தாலும் இந்த கொடூரக் கொலை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், யுத்தம் கூட இடம்பெறாத பகுதியில் இடம்பெற்றது.
இதற்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. யாரை நாம் நோவது.
2006 ம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி எனது நண்பர்கள் எந்த வித காரணமுமின்றி விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
18 வருடங்கள் ஒன்றாக இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நாங்கள்அரச கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தோம் யுத்தம் இடம்பெறும் பகுதியில் இல்லை.
அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்- அங்கு நடந்தவைகளிற்கான சாட்சி நான்.
பிரேத அறையில் பெருமளவு குருதியுடன் நான் உடல்களை பார்த்தது அதுவே முதல் தடவை.
நான் பல உறக்கமற்ற இரவுகளை எதிர்கொண்டேன் திருகோணமலை மக்களும்தான் இன்றும் அவர்களது உறவினர்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்
2006 ஜனவரி இரண்டாம் திகதி சரியாக மாலை 7.30மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றது
படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான சிவானந்தாவை முதல் நாள் நான் கொழும்பில் சந்தித்தேன் நான் சீமா படிப்பதற்காக கொழும்பு வந்திருந்தேன் வெள்ளவத்தையில் நான் சிவானந்தாவை சந்தித்தேன் சிவானந்தா எனக்கு கூறியிருந்தார் இன்றிரவு நான் சிலவேளை திருகோணமலை செல்வேன் என தெரிவித்திருந்தார்.
அப்போது சிவானந்தா மொரட்டுவ பல்கலைகழகத்தில் குவானிட்டி சேர்வேயரிங் படித்துக்கொண்டிருந்தார்.சிவானந்தாவை நான் அன்றிரவு சந்தித்தவேளை அவர் திருகோணமலை செல்வதாக இல்லையா என்றமுடிவை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
முதலாம் திகதி இரவு நான் கொழும்பிலிருந்து புறப்பட்டேன் இரண்டாம் திகதி காலையில் நான் அங்கு சிவானந்தாவை ஒரு இடத்தில் கண்டேன்.
சிவானந்தாவை போல ஏனையவர்களில் மிகவும் நெருங்கிய நண்பர் ரஜீகர்- ரஜீகரின் அப்பாவின் பெயர் மனோகரன் அவர் ஒரு வைத்தியர் அவர்தான் இன்றுவரைக்கும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டுள்ளார் இலங்கை மனித உரிமை திணைக்களத்திலும் செயற்பட்டுள்ளார்.
ரஜீகரை நான் திருகோணமலை கடற்கரை வீதியருகே சந்தித்தேன் அப்போது நேரம் 6.45.
அதேபோல மிகநீண்டகாலமாக என்னுடன் நல்ல நட்பிலிருந்த ஏனையவர்கள் சிவானந்தா ரஜீகர், லொகான், ஹேமசந்திரா, சஜித். இவர்கள் தான் ஐவர் .
இந்த சம்பவம் 7.35 மணிக்கு இடம்பெற்றது.
7.15 -7.20 வரை நான் அந்த இடத்தில் நின்றிருந்தேன்
அன்றைய நாள் வழமை போல காணப்பட்டது. திருகோணமலையின் பிரதான கடற்கரையில் பெருமளவு மக்கள் காணப்பட்டனர்.கோணேஸ்வரர் கோவிலை அண்டியுள்ளது.
அந்த கடற்கரை தொடங்குகின்ற இடத்தில் ஒரு காந்தி சிலை இருக்கின்றது அந்த சிலையை சுற்றி ஒரு கட்டு உள்ளது அந்த கட்டில் தான் இவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றால் நீலநிற முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டார். மக்கள் அனைவரும் சிதறி ஓடிவிட்டார்கள். அவர்களிற்கு சிறிய சிறிய காயம் ஏற்பட்டது.
இந்த வெடிச்சத்தத்தை நான் கேட்டேன் அப்போது நான் மாமா வீட்டிலிருந்தேன் அருகில் இருந்தது.
ஏதோ நடந்துவிட்டது என்பது தெரிந்தது.
வைத்தியர் மனோகரன் மகனை தொடர்புகொள்ள முயன்றுள்ளார், தொடர்புகொள்ள முடியவில்லை.
ரஜீகரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றார் முடியாமல் போகவே அவர் கடற்கரையை நோக்கி போய் இருக்கின்றார்
கடற்கரையில் உரிய மின்விளக்குகள் அனைத்தும் அனைக்கப்பட்டு மின்கம்பியில் கடற்கரை வீரர்களால் தடை போடப்பட்டுயாரும் போகக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தும் சத்தம் வைத்தியர் மனோகரனிற்கு கேட்டுக்கொண்டிருந்தது.
அதன் பின்னர் அவர் அங்கு செல்ல முயற்சித்தும்,ராணுவத்தினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
விளக்குகள் அனைத்தையும் அணைக்கப்பட்டு வீதிகள் தடை செய்யப்பட்டிருந்தன.
அவரின் முயற்சி பலனளிக்கவில்லை.
8மணிக்கு பிற்பாடு வைத்தியசாலையிலிருந்து ஐந்து பேரின் உடல் பிரேத அறைக்கு கொண்டுவரப்பட்டதாக செய்தி திருகோணமலை முழுவதும் பரவியது.
திருகோணமலை மக்கள் யாரும் வெளியே வரவில்லை மிகுந்த பயத்துடன் காணப்பட்டனர்.
அவ்வேளை நான் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்- எனக்கு இவ்வாறான பிரச்சினையொன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள் கிடைத்தன.
யார் எவர் என்று தெரியாமல் நாங்கள் அன்றிரவை ஒரு பதட்டமான சூழ்நிலையில் கழித்துக்கொண்டிருந்தோம்.
எனக்கு மனம் கேட்கவில்லை என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைத்து நான் காலை 4மணியளவில் வைத்தியசாலை நோக்கி சென்றேன்.
வைத்தியசாலைக்கு வெளியே ஐவரின் உறவினர்கள் கதறி அழுதவாறு இருப்பதை நான்பார்த்தேன்.
பின்னர் பிணவறைக்கு சென்று நான் பார்த்தவேளை அவர்கள் அனைவரும் அவ்வளவு காலம் பழகியவர்கள் அவர்களிற்கு தலையிலே நெற்றியிலே சூட்டு காயம் – மிகவும் அருகிலிருந்து சுட்ட காயங்கள் காணப்பட்டன.
அதன்பின்னர் சடலங்களை உறவினர்களிடம் கையளிப்பதில் சிரமம் காணப்பட்டது.
இவர்கள் விடுதலைப்புலிகள் என கையெழுத்திட்டால்தான் உடல்களை கையளிப்போம் என பொலிஸார் இணுவத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
நாங்கள் யாரும் விடுதலைப்புலிகளை நேரே பார்த்ததில்லை திருகோணமலை என்பது முழுமையாக அரசகட்டுப்பாட்டில் காணப்பட்ட பகுதி- இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமாதான பேச்சுவார்த்தையின் பின்னர்தான் நாங்கள் விடுதலைப்புலிகளை சந்தித்தோம்.
அதுவரை எங்களிற்கு விடுதலைப்புலிகள் எப்படி இருப்பார்கள் என்பது கூட தெரியாது.
அதேபோல தான் இந்த ஐந்துபேரும் அவர்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.
அவர்கள் மிகசாதாரணமாக இந்துகல்லூரியில் படித்து படிப்பை முடித்து பல்கலைகழகம் சென்றவர்களும் செல்ல காத்திருந்தவர்களும் ஏனைய படிப்பை தொடர்ந்தவர்களும்தான்.
நான் அங்கு படித்த காலத்தில் அரசியல் பேசியிருக்கின்றேன் மக்களுடைய பிரச்சினைகளை பேசியிருக்கின்றேன் அவர்கள் மிகவும் சாதாரணமானவர்கள் என்ற விடயத்தை நான் இந்த இடத்திலே கூற விரும்புகின்றேன்.
பின்னர் நாங்கள் அனைவரும் சேர்ந்து முழுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தோம், எக்காரணம் கொண்டும் இப்படியான பொய்யான கையெழுத்துக்களை அவர்கள் விடுதலைப்புலிகள் என்ற கையெழுத்துக்களை வைக்கமாட்டோம் என அனைவரும் அந்த இடத்தில் சண்டையிட்டோம்.
பின்னர் அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்துவிட்டது இது அவர்கள் செய்த மாபெரும் பிழையென்று அதன் காரணமாக அன்று திருகோணமலையிலிருந்து இராணுவத்தினர் முற்றுமுழுதாக அகற்றப்பட்டனர்.
அன்றிரவு இராணுவத்தினர் இருந்தனர் எனவே இவர்களிற்கு இறுதிக்கிரியை எங்கள் கல்லூரியின் மைதானத்தில் மாபெரும் விதத்தில் நடத்துவதற்காக ஒழுங்கு செய்திருந்தோம்.
திருகோணமலை முழுவதும் சென்று இவ்வாறான நிகழ்வு இடம்பெறப்போகின்றது என்பதை ஒலிபெருக்கியில் தெரிவிக்கவேண்டும். பயத்தில் யாரும் முன்வரவில்லை. நான்தான் ஒரு முச்சக்கர வண்டியில் சென்று திருகோணமலை முழுவதும் இந்த விடயத்தை கூறியிருந்தேன். இறுதி சடங்கிற்கு உரிய ஏற்பாடுகளையும் இந்துக்கல்லூரியின் மாணவதலைவர் என்ற வகையில் நான் செய்திருந்தேன்.
எனது மனதை பாதித்த வாழ்க்கையில் மறக்க முடியாத விடயம் இது.
இன்றுவரை இதற்கான நீதி கிடைக்கவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான விடயம்.
இந்த சம்பவத்தின் பின்னர் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். நீதியை கோரி நின்றார்கள் அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் தங்கள் வழக்குகளை கைவிட்டு வெளிநாடு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
திருகோணமலையில் இருவர் உயிர் தப்பியிருந்தார்கள் மேலும் பார்த்தவர்களிற்கு தெரியும் இதனை செய்தது இராணுவம் தான் என்று.
எந்த காரணமும் இல்லாமல் இவர்களை கொலை செய்வார்களா என ஊடக நண்பர் ஒருவர் கேட்டார்.
தென்பகுதியில் சிங்கள மக்களிற்கு இருக்க கூடிய பாரிய பிரச்சினை வடக்கு பகுதியில் கொலைகளை ஏதோ ஒரு வகையில் நீங்கள் நியாயப்படுத்துவது.
இது மிகவும் தவறான விடயம்.
அல்லது இந்த கொலை தொடர்பில் பேசுபவர்கள் விடுதலைப்புலிகள் என சாயம் பூச முயல்கின்றனர். பல நியாயங்கள் எங்களிற்கு கிடைக்கவேண்டியுள்ளது அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்
நான் வடக்குகிழக்கில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில்
எனது 15 வயது முதல் உணரக்கூடியதாகயிருந்தது. நான் கொழும்பு பல்கலைகழகத்திற்கு வந்தபோதும் கூட என்னை விடுதலைப்புலி என்றே அழைத்திருக்கின்றார்கள் விடுதலைப்புலியே என்றே கையாண்டார்கள் தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலைப்புலிகள் என்றே கையாண்டார்கள்.
இப்படித்தான் இராணுவத்தினர் தமிழ் மக்களை கையாண்டார்கள் என்பதை நீங்கள் பலர் வெளியில் கொண்டுசெல்லவேண்டிய தருணமிது
நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லவேண்டிய தருணம் இது
வைத்தியர் மனோகரனின் படுகொலைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இறுதியில் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளை திருப்திப்படுத்துவதற்காக 12 விசேட அதிரடிப்படையினரை கைதுசெய்தனர் – வெளிநாட்டுக்கு ஒரு நாடகமாடினார்கள்
பின்னர் அந்த வழக்கை இழுத்து இழுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்த பின்னர் அவர்களிற்கு எதிராக போதிய சாட்சியமில்லை என தெரிவித்து விடுதலை செய்தனர்.
மிகமோசமான படுகொலைகளில் ஈடுபடடவர்கள் இந்த நாட்டிலே சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட முதலாவது பதிலளிக்கவேண்டியவர் மகிந்த ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச இராணுவதளபதி வசந்த கரணாகொட கொட்டகதெனியஇவர்களே பொறுப்புக்கூறவேண்டியவர்கள்.
பொறுப்புக்கூறலை தவிர்த்து விட்டு தமிழ் மக்களுடன் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் தென்னிலங்கை அடையமுடியாது