2024-ஆம் ஆண்டில் திருப்பதி உண்டியலில் ரூ.1365 கோடி வசூல்! லட்டு விற்பனையிலும் கோடி கோடியாக வருமானம்!
.
இந்தியாவின் பணக்கார கோயிலாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்குள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) 2024-ஆம் ஆண்டில் கோவிலில் உள்ள உண்டியலில் மூலம் வருமானமாக ரூ.1,365 கோடி கிடைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.
2023-ஆம் ஆண்டு உண்டியல் மூலம் TTD-க்கு கிடைத்த வருமானம் ரூ. 1391.86 கோடி, 2022-ஆம் ஆண்டில் ரூ.1291.69 கோடி கிடைத்ததுதிருப்பதியில் இருக்கும் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பணம், தங்க நாணயங்கள், தங்க பார்கள், வெள்ளி வெளிநாட்டு கரன்சி என தங்களிடம் உள்ள பொருட்களை வேண்டுதலின் பேரில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கைகள் ஸ்ரீ வராஹ ஸ்வாமி கோவிலுக்கு அருகில் உள்ள பரகாமணி கட்டிடத்தில் பிரித்து எடுக்கப்பட்டு எண்ணப்படுகிறது.
அதிகரித்த பக்தர்கள்: 2024-ஆம் ஆண்டு, திருப்பதி கோவிலுக்கு 2.55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதில் 99 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 6.30 கோடி பேர் அன்னபிரசாதம் வழங்கியுள்ளனர். அதோடு கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் 12.14 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளன. 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டிற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ. 5141.74 கோடி மதிப்பீட்டிலான பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. இதில் உண்டியல் பரிசு தொகையான ரூ. 1,611 கோடி மற்றும் வட்டி வருமானம் ரூ.1,167 கோடி ஆகியவை அடங்கும். இதில் 1,773 கோடியை ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மெண்டிற்கும், ரூ.350 கோடியை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஒதுக்கியுள்ளது.இந்து தர்ம பிரச்சார பரிஷத் திட்டங்களுக்கு ரூ. 108.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மேம்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களுக்காக ரூ.113.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதோடு மாநில அரசின் நிதிக்காக 50 கோடி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருமானம் மட்டுமின்றி மற்ற வழிகளிலும் வருவாய் வழங்கப்படுகிறது. கல்யாண மண்டப ஒதுக்கீட்டின் மூலம் ரூ. 147 கோடியும் அறைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் ரூ.151.50 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. TTD 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்தது. இதுவரையில் 11,329 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4,000 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.