கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.