கென்யா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்… துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் பலி!
.
கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
திடீரென அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த பொலிஸார், பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இந்த நிலையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (KNCHR) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது.