இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியேற்றம்.
குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் .

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயற்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
முந்தெணியாற்று கருத்திட்டம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை நிறைவுப்படுத்தப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் கைவிட்டு போகுமா என்ற சந்தேகம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் மத்தியில் காணப்படுகிறது.
உறுகாமம் - கித்துள் ஆகிய பகுதிகளை இணைத்து முந்தெணியாற்று திட்டத்தை அமுல்படுத்துவதால் 12 சிறுகுளங்களுக்கும், 25 ஆயிரம் ஹெக்டயார் விவசாய நிலங்களுக்கும் நீரை விநியோகிக்க முடியும். அதேபோல் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அத்துடன் கரடியனாறு விதை உற்பத்தி மையத்துக்கும் நீரை விநியோகிக்க முடியும்.
இதுவரை காலமும் வலதுசாரி கொள்கை உடையவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். தற்போது இடதுசாரி கொள்கையுடையவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் ஆகவே சமத்துவ அடிப்படையில் அபிவிருத்திகள் பகிரப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் எமது மக்கள் பல தசாப்தகாலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மைகாலமாக அந்த பகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டார்கள்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியமர்த்தப்பட்டவர்களை உடனடியாக வெளியேற்றுமாறும், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் இன நல்லினக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பு செயற்படுத்தப்படவில்லை.
இன நல்லினக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.