“தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ்த் திருநாளே பொங்கல் திருநாளாகும்.
.
“தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். இதற்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ் திருநாளே பொங்கல் திருநாளாகும்.
பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது வரவுகளுக்கு வரவேற்பு அளித்திடும் வண்ணத் திருநாள் தான் தமிழர் திருநாள் ஆகும்.
தமிழர்களின் முக்கியமான பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று (14) கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
சூரியதேவன் தனுராசியில் இருந்து மகரராசிக்கு நுழையும் தை முதலாம் திகதியில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால் இது ‘மகரசங்கராந்தி’ எனவும் அழைக்கப்படுகின்றது.
வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி சொல்ல நடாத்தப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளில் சூரியனை வணங்கி புதிய பானையில் பொங்கல் செய்து⸴ சூரியனுக்குப் படையல் இடப்படுகின்றது.
உழவர் திருநாளான பொங்கலன்று, நாம் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கு உதவும் இயற்கை, கால்நடைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் பொங்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
தை பொங்கல் விழாவானது தமிழர் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.