பயந்து ஒதுங்குகிறாரா சஜித்?: அனுரவின் பின்னால் ரணில்.
.
முதலில் பொருளாதார விவாதம் மற்றும் அதன் பின்னர் தலைமைத்துவ விவாதம் என்பன விவாதம் தொடர்பிலான சஜித் பிரேமதாசவின் கட்டாய நிபந்தனை என்பதால் நேற்று (06) இடம்பெற தீர்மானிக்கப்பட்டிருந்த விவாதத்தில் சஜித் கலந்துக் கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ITN) கடிதமொன்றின் மூலம் நேற்று மாலை அறியப்படித்தியிருந்தார்.
தென்னிலங்கை அரசியலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இடையிலான விவாதம் தொடர்ச்சியாக பேசு பொருளாக அமைந்திருந்தது.
இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி நாட்களை வழங்கி அரசியல் மேடைகளில் பேச்சுக்களை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், தனது கட்சி சார்பில் விவாதம் தொடர்பில் சில நிபந்தனைகளை முன் வைத்திருந்தோம் எனினும், தேசிய மக்கள் சக்தி எந்தவிதமான கலந்துரையாடலிலும் ஈடுபடாமல் சுயாதீன தொலைக்காட்சியின் அறிவித்தலின்படி, விவதாத்திற்கு தயார் எனத் தெரிவித்ததாக நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நாடகமொன்றை அரங்கேற்றி வருகிறது, இந்த நாடகத்துக்கு பின்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கின்றாரா என்ற சந்தேகம் தற்போது எங்களுக்கு எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இரு விவாதங்களும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 6ஆம் திகதியின் பின்னர் எந்தவித விவாதத்துக்கும் தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.