டுப்ளிகேட் நாமல்; உண்மையான நாமல் யார்? முன்னாள் ஜனாதிபதியின் மகன் தேர்தலில் போட்டியிட என்ன தகுதி உள்ளது?
ஜனாதிபதியின் மகன் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்ற டுப்ளிகேட் நாமல் ராஜபக்ஷ.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ள உண்மையான நாமல் ராஜபக்ஷ நானே!
எனது பெயரை ஒத்த முன்னாள் ஜனாதிபதியின் மகன் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்ற டுப்ளிகேட் நாமல் ராஜபக்ஷ என்று சமவிம கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஆகிய நான் ஜனாதிபதி வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். எனது பெயரை ஒத்த ஒருவர் போட்டியிடுவதாலேயே நான் போட்டியிடுவதாக சிலர் கூறுகின்றனர். 2015இல் மைத்திரிபால சிறிசேனவின் உருவத்தை ஒத்த, அவரை போன்று ஆடையணிந்த ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டதை போன்றே இம்முறை நான் வேட்பாளராவதாக ராஜபக்ஷ முகாமை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராவதற்கு முன்னர் இருந்தே நாங்கள் போராட்டக் களத்தில் இருந்து எமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றேன். பிரபுக்களின் பிள்ளைகள் எனது பெயரில் இருந்தால் நான் போட்டியிடக் கூடாதா? எனக்கு தேர்தலில் போட்டியிடத் தேவையான தகுதிகள் இருக்கின்றன. ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி உள்ளது?
அவரிடம் சில கேள்விகளை எழுப்புகின்றேன். அவர் சட்டத்தரணி என்று கூறுகின்றார். ஆனால் நீங்கள் சட்டக்கல்லூரியில் பரீட்சையை மற்றைய பரீட்சார்த்திகளுடன் எழுதினீர்களா? 80 வீதம் விரிவுரை வகுப்புகளில் கலந்துகொண்டிருந்தாலே பரீட்சை எழுத முடியும். அதன்படி நீங்கள் 80 வீத வகுப்புகளில் கலந்துகொண்டீர்களா? இதற்கு பதிலளிக்க வேண்டும். இதனை கொண்டு மக்கள் யாருக்கு தகுதி உள்ளது என்று தீர்மானிக்கலாம். அவர் நாட்டுக்கு செய்துள்ள சேவை என்ன? மகிந்தவின் மகன் என்பதனாலேயே அவர் போட்டியிடுகின்றார்.
நான் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம் நடத்திய போது மக்களுக்காக நாங்கள் முன்னின்றுள்ளோம். பல வழக்குகளில் நாங்கள் இலவசமாக கலந்துகொண்டுள்ளோம். இதுபோன்று சமூகத்திற்காக பல வேலைகளை செய்துள்ளோம். ஆனால் நீங்கள் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதையே செய்துள்ளீர்கள். நாட்டில் முறையான விசாரணைகள் நடந்திருந்தால் நிச்சயம் சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டிய நபரே ஆகும்.
நாங்கள் முறையாக எமது வேலைத்திட்டங்களை வெளிக்காட்டியுள்ளோம். இன்னும் மக்கள் மீசைக்கும், சால்வைக்கும் ஏமாறக்கூடாது. இவ்வாறான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து நாட்டை சீரழித்துவிட வேண்டாம் என்று கேட்கின்றோம். தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ள உண்மையான நாமல் ராஜபக்ஷ நானே. அவர் தகுதியற்ற டுப்ளிகேட் நாமல் ராஜபக்ஷவே.