இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
"அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி".

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கமான பரிசோதனைகளுக்கு பின்னர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 16) காலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆஞ்சியோ செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதனை அறிந்த இசை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தனது இசையால் உலகைத் தனது கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவருக்கு, முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதும் தனது இசையால் மிகப்பெரிய கட்டமைப்பைக் கட்டியவர். அவருக்கென உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி:
தற்போது, அவரது இசையில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில் மிகவும் பிஸியாக வலம் வரும் இசையமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 7.30 மணி அளவில் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இருதயத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், பல்வேறு பரிசோதனைகள் செய்து வந்ததாகவும், குறிப்பாக இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது. அனைத்து சிகிச்சையும் நிறைவடைந்த பிறகு வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்புகள் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாகவும், ஏதேனும் கண்டறியப்பட்டால் அவருக்கு அடுத்த கட்ட பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் எனவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி என்ற தகவலை அறிந்ததும், அவரது தீவிர ரசிகர்கள் பதறிவிட்டனர். அதுமட்டுமின்றி, அவர் விரைவில் குணமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை விளக்கம்:
இந்த நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தான் அவர் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதாவது, சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், வழக்கமான பரிசோதனைகளுக்கு பின்னர் வீடு திரும்பினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், அவரது மனைவி சாயிரா பானுவுடன் பரஸ்பர விவாகரத்து அறிவித்துப் பிரிந்துள்ளார். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.அமீன் நன்றி தெரிவித்து பதிவு:
தற்போது, வழக்கமான பரிசோதனை முடிந்து ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பியுள்ள நிலையில், அவரது மகன் ஏ.ஆர்.அமீன் சமூக வலைத்தளப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, "அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சற்று பலவீனமாக இருந்தார். அதனால் தான் நாங்கள் சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஆனால் தற்போது அவர் நலமாக உள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் அக்கறையையும், ஆதரவையும் உண்மையிலேயே நாங்கள் பாராட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்," எனப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் நலம் விசாரிப்பு:
முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல் நலன் குறித்துக் கேட்டறிந்தேன். தற்போது, அவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். மகிழ்ச்சி!," எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி திரையுலகினர் பலரும் அவர் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டனர்.