பிரான்சில் பரவும் 'போலி மருத்துவ அட்டை'(Carte Vitale)மோசடி!
பிரான்ஸ் மருத்துவ அட்டைக்குக் காலாவதி திகதியே கிடையாது
பிரான்சில் பரவும் 'போலி மருத்துவ அட்டை'(Carte Vitale)மோசடி - பொதுமக்களே அவதானம் !
பிரான்சில் மருத்துவக் காப்பீட்டுத் துறை (L'Assurance Maladie) அனுப்புவது போலவே போலியான மின்னஞ்சல்களை அனுப்பி, பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடும் புதிய மோசடி ஒன்று பரவி வருகிறது.
இந்த (2026)ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இணையத்தில் இந்த மோசடி உலா வருகிறது. "உங்களின் புதிய 2026-ம் ஆண்டிற்கான மருத்துவ அட்டை (Carte Vitale) தயாராக உள்ளது" என்று ஒரு மின்னஞ்சல் வரும்.
பார்ப்பதற்கு 'அமெலி' (Ameli) இணையதளம் போலவே அரசு சின்னம், நிறம் மற்றும் வடிவமைப்புடன் இந்த மின்னஞ்சல் மிகத் துல்லியமாக இருக்கும்.
இந்த மின்னஞ்சல் "contact@ameli.com" என்ற முகவரியிலிருந்து வருகிறது. ஆனால், உண்மையான அரசு இணையதள முகவரி "ameli.fr" என்பதாகும். இந்தச் சிறு மாற்றத்தைக் கவனிக்கத் தவறினால் ஆபத்து நிச்சயம்!
அந்த மின்னஞ்சலில், புதிய அட்டையைப் பெறுவதற்கு உங்கள் வங்கிக் விவரங்கள் மற்றும் அஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுமாறு கேட்கிறார்கள். இது முழுக்க முழுக்கப் பொய்.
பிரான்ஸ் மருத்துவ அட்டைக்குக் காலாவதி திகதியே கிடையாது. தொலைந்து போனாலோ, திருடு போனாலோ அல்லது பழுதானாலோ மட்டுமே புதிய அட்டை வழங்கப்படும். ஆண்டுதோறும் புதுப்பிக்கத் தேவையில்லை; இதற்குக் கட்டணமும் இல்லை.
கடந்த ஜனவரி 5-ம் திகதி முதல் மட்டும் சுமார் 160-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த மோசடி மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால் அல்லது தவறுதலாக விவரங்களைப் பகிர்ந்திருந்தால் செய்ய வேண்டியவை:
மின்னஞ்சலில் உள்ள எந்தவொரு இணைய இணைப்பையும் (Link) அழுத்த வேண்டாம்.
உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு பணப் பரிவர்த்தனையை முடக்கவும்.
உங்கள் மருத்துவக் காப்பீட்டு இணையதளக் (Ameli) கடவுச்சொல்லை (Password) உடனே மாற்றவும்.
'cybermalveillance.gouv.fr' என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.
கண்டிப்பாக நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் மருத்துவக் காப்பீட்டுத் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் வங்கி விவரங்களைக் கேட்காது. சந்தேகம் இருந்தால் நேரடியாக உங்கள் பிராந்திய CPAM அலுவலகத்தைத் தொடர்புகொள்வதே சிறந்தது.


