'அத்தனோர் ' கிளை செய்த கொடூரக் குற்றங்கள்: 22 பேர் மீதான விசாரணை
"நாங்கள் வெறும் மிரட்டல் விடுக்கவே சொன்னோம்; கொலை செய்யச் சொல்லவில்லை"
Franc-maçonnerie 'அத்தனோர் ' கிளை செய்த கொடூரக் குற்றங்கள்: 22 பேர் மீதான விசாரணை இன்று தொடக்கம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று (மார்ச் 30, திங்கட்கிழமை) ஒரு மாபெரும் குற்றவியல் வழக்கு விசாரணை தொடங்குகிறது. பணம் வாங்கிக்கொண்டு கொலை, கொலை முயற்சி, கடுமையான வன்முறை மற்றும் கூட்டுச் சதி எனப் பல பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்ட 'அத்தனோர் ' (Athanor) என்ற Franc-maçonnerie அமைப்பைச் சேர்ந்த 22 பேர் இன்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படுகின்றனர்.
பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தொடங்கும் இந்த அதிரடி விசாரணை, வரும் ஜூலை 17-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் 19 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 22 பேர் விசாரிக்கப்படுகின்றனர் (இவர்கள் 1952 முதல் 1996-ஆம் ஆண்டிற்குள் பிறந்தவர்கள்). ஆரம்பத்தில் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஒருவர் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு தற்செயலான நிகழ்வே இந்த மாபெரும் கிரிமினல் வலையை அம்பலப்படுத்தியது. பெருநிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்கும் முக்கிய நிபுணர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றபோது, பிரான்சின் வெளிநாட்டு உளவுத்துறையைச் சேர்ந்த (DGSE) இரண்டு இராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாகக் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்தான், கூலிப்படையைப் போலச் செயல்பட்ட இந்த மாபெரும் குற்றப் பின்னணி கொண்ட குழு பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன.
இந்தக் குழுவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் 'நூயி-சுர்-சென்' (Neuilly-sur-Seine) பகுதியில் இயங்கும் 'அத்தனோர்' எனப்படும் Franc-maçonnerie அமைப்பில் (la Grande Loge Alliance Maçonnique Française (GLAMF) தங்களை இணைத்துக் கொண்டவர்களாகும் . பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்தக் குழு பல சதித்திட்டங்களைத் தீட்டியுள்ளது காவல்துறை விசாரணையில் அம்பலமானது. அவற்றில் சில முக்கியக் குற்றங்கள்: கார் பந்தய வீரர் கொலை: 2018-ஆம் ஆண்டின் இறுதியில், லாரன்ட் பாஸ்குவாலி (Laurent Pasquali) என்ற புகழ்பெற்ற கார் பந்தய வீரரைக் கடத்திக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். காணாமல் போன அவரது உடல், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு 2019 செப்டம்பரில் Haute-Loire வனப்பகுதியில் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.
அவருக்குக் கடன் கொடுத்த வாகனத் தொழில் செய்யும் தம்பதியினரே இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது (எனினும், தாங்கள் கொலை செய்யச் சொல்லவில்லை என அந்தத் தம்பதி மறுத்து வருகிறது). தொழிற்சங்கவாதி மீது தாக்குதல்: தனது முதலாளிக்கு 'இடையூறாக' இருந்ததால், 'Ain' பகுதியைச் சேர்ந்த சி.ஜி.டி (CGT) தொழிற்சங்கவாதி ஒருவரைக் கொலை செய்யவும் இந்தக் குழு முயன்றுள்ளது.
மேயருக்குக் குறி: அதேபோல,Val-de-Marne பகுதியின் மேயர் ஒருவரையும் தீர்த்துக்கட்ட இந்தக் கிரிமினல் குழு திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்டுப் பணம் கொடுத்தவர்களும், அடியாள்களாகச் செயல்பட்டுக் குற்றங்களைச் செய்தவர்களும் தற்போது நீதிமன்றத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
"நாங்கள் வெறும் மிரட்டல் விடுக்கவே சொன்னோம்; கொலை செய்யச் சொல்லவில்லை" என்று குற்றத்தைத் தூண்டியவர்களும், "எங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை மட்டுமே நாங்கள் விசுவாசமாகச் செயல்படுத்தினோம்" என்று கொலையாளிகளும் மாறி மாறிப் பழிபோட்டுத் தப்பிக்க முயல்கின்றனர்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் அங்கம் வகிக்கும் ஒரு இரகசிய அமைப்பு, கூலிப்படையைப் போலச் செயல்பட்ட இந்த விவகாரம் பிரான்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழு உண்மைகளும் வரும் ஜூலை மாதம் வெளியாகும் தீர்ப்பில் தெரியவரும்.


