சூறாவளியால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு
இடம்பெயர்ந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000 நிதி உதவிகளை விநியோகித்தல்!
"தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு அமைச்சர்கள் தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் “விசேட பேரிடர் குழுக் கூட்டம்" நேற்று (2025-12-22) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டுறவு அபிவிருத்தித் துணை அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் விசேட பங்கேற்புடன் நடந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த “விசேட பேரிடர் குழுக் கூட்டம்”நடைபெற்றது.
சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், விவசாய சமூகத்திற்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000 நிதி உதவிகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
பொது மக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை உடனடியாக வழங்கவும், சேதமடைந்த பாதைகள், பாலங்கள் மற்றும் குளக்கட்டுகளைப் புதுப்பிக்கும் பணிகளை விரைவாக முடிக்கவும், தற்போது பயிர் செய்யக்கூடிய நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளத் தேவையான வசதிகளை வழங்கவும், நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
இடம்பெயர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு அவற்றை வழங்கவும், மீன்பிடித்தலை மீண்டும் தொடங்க தேவையான உபகரணங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு இணையாக, பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு அமைச்சர்களின் தலைமையில் இழப்பீடு வழங்கப்பட்டது.
எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட எம்.பிக்கள் குழுவும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து அரச நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


