அமெரிக்க முற்றுகையை 'கடற்கொள்ளை' எனச் சாடும் ஈரான்; மீண்டும் எகிறியது கச்சா எண்ணெய் விலை!
முடக்கப்பட்டிருந்த ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள 'கோர் மோர்' (Khor Mor) எரிவாயு ஆலையில், தற்போது மீண்டும் உற்பத்தி!
அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உலகளாவிய பொருளாதாரச் சந்தையில் அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 13, 2026 நிலவரப்படி களத்தில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
ஈரானின் பகிரங்க எச்சரிக்கை: இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் தங்கள் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என்ற அறிவிப்பை, அப்பட்டமான "கடற்கொள்ளை" என்று ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியில் உள்ள பிற நாட்டுத் துறைமுகங்களுக்கும் தங்களால் பெரும் ஆபத்து நேரிடும் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய்: முக்கிய வர்த்தகப் பாதையான 'ஹார்முஸ் நீர்ச்சந்தியில்' (Strait of Hormuz) மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. மே மாத விநியோகத்திற்கான அமெரிக்கக் கச்சா எண்ணெய் (WTI) 7.13 விழுக்காடு உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 103.46 டொலர்களாகவும், ஜூன் மாத விநியோகத்திற்கான வடக்கடல் கச்சா எண்ணெய் (Brent) 6.66 விழுக்காடு உயர்ந்து 101.54 டொலர்களாகவும் எகிறியுள்ளன.
அதிகரிக்கும் பணவீக்க அச்சம்: போர்ச் சூழலால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், நாடுகளின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களும் குறையாமல் உச்சத்திலேயே நீடிக்கின்றன. அமெரிக்காவின் 10 ஆண்டுக்காலப் பத்திர வட்டி 4.33 விழுக்காடாகவும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் வட்டி விகிதங்கள் முறையே 3.70 மற்றும் 3.05 விழுக்காடாகவும் உள்ளன.
ஈராக்கில் மீண்டும் எரிவாயு உற்பத்தி: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகப் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் முடக்கப்பட்டிருந்த ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள 'கோர் மோர்' (Khor Mor) எரிவாயு ஆலையில், தற்போது மீண்டும் உற்பத்தி சீரடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 'டானா கேஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. குர்திஸ்தான் பகுதியின் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த ஆலையிலிருந்தே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா சின்னப்பொடி


