அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் திடீர் பதவி விலகல்!
ஹார்முஸ் நீர்ச்சந்தியில் (Strait of Hormuz) பதற்றம் தணியாத நிலையில், கடற்படையின் இந்தத் தலைமை மாற்றம்!
ஈரானுடனான போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலையாத சூழலில், அமெரிக்கக் கடற்படையின் மிக உயரிய சிவில் அதிகாரியான ஜோன் ஃபீலன், நேற்று (புதன்கிழமை) மாலை தனது பதவியிலிருந்து 'உடனடியாக' விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கக் கடற்படை ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி வளைத்து ஒரு கடல் முற்றுகையை (Naval Blockade) நடத்திக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தத் தலைமை மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
பதவி விலகலுக்குப் பின்னால் இருக்கும் 'நிழல்' காரணங்கள்
அரசுத் தரப்பில் ஜான் ஃபீலனின் சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டாலும், அவர் தானாக முன்வந்து விலகவில்லை என்றும், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றும் பென்டகன் (Pentagon) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மூன்று முக்கிய காரணங்கள்:
உள்நாட்டு அதிகாரப் போட்டி: பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் துணை அமைச்சர் ஸ்டீவ் ஃபைன்பெர்க் ஆகியோருடன் ஜோன் ஃபீலனுக்கு நீண்டகாலமாக அதிகார மோதல் இருந்து வந்தது. குறிப்பாக, கப்பல் கட்டும் திட்டங்களை நிர்வகிப்பதில் இவர்களுக்குள் கடும் கருத்து வேறுபாடுகள் நிலவின.
அதிபர் டிரம்ப்புடன் நேரடித் தொடர்பு: இராணுவப் படிநிலைகளை (Hierarchy) மீறி, ஜோன் ஃபீலன் நேரடியாக அதிபர் டிரம்ப்புடன் தொடர்புகொண்டு 'ட்ரம்ப்-வகை' (Trump-class) போர்க்கப்பல்களை உருவாக்கும் திட்டங்களைப் பற்றிப் பேசி வந்தது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை ஆத்திரமூட்டியது.
சர்ச்சைக்குரிய கருத்துகள்: சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்கப் போர்க்கப்பல்களை வெளிநாட்டுத் தளங்களில் உருவாக்கலாம் என அவர் குறிப்பிட்டது, 'அமெரிக்காவிற்கே முன்னுரிமை' (America First) என்ற கொள்கைக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.
ஜான் ஃபீலன் ஒரு தொழிலதிபராக இருந்த நிலையில், அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்றுள்ள ஹங் காவ், 25 ஆண்டுகள் கடற்படையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஒரு ஓய்வுபெற்ற தளபதி (Retired Captain) ஆவார். அனுபவம்: ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் போர்க்கள அனுபவம் பெற்றவர்.
அரசியல் பின்புலம்: அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் இவர், இனிவரும் காலங்களில் கடற்படையின் நிர்வாக மற்றும் கொள்கை முடிவுகளைத் தலைமை தாங்குவார்.
ஹார்முஸ் நீர்ச்சந்தியில் (Strait of Hormuz) பதற்றம் தணியாத நிலையில், கடற்படையின் இந்தத் தலைமை மாற்றம் மிகவும் முக்கியமானது. ஜோன் ஃபீலன் விலகினாலும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பிடி தளரவில்லை. ஈரானுக்குச் செல்லும் கப்பல்களை இடைமறித்துத் திருப்பி அனுப்பும் பணியில் அமெரிக்கக் கடற்படை இன்றும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நிழல் மனிதர்களின் நகர்வு: 'ஆழ்ந்த அரசு' (Deep State) மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய திட்டங்களுக்குத் தடையாக இருந்த ஜோன் ஃபீலன் அகற்றப்பட்டதன் மூலம், இனி ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தலைமையகத்தில் நிகழும் இந்த அதிரடி மாற்றங்கள், அந்த நாடு ஒரு பெரிய போருக்குத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்கிறதா என்ற ஐயத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
சிவா சின்னப்பொடி


