கயிற்றின் மேல் நடக்கும் லெகோர்னு அரசு: வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுமா?
நம்பிக்கையின்மை முடிவில் வீழுமா?
பிரான்சின் புதிய தலைமை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னுவின் இரண்டாவது அரசு, 34 அமைச்சர்களுடன் இன்று (திங்கட்கிழமை, அக்டோபர் 13, 2025) தனது பணிகளைத் தொடங்குகிறது. ஆனால், இந்த அரசு பிறந்தவுடனேயே அதன் ஆயுளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையின்மை முடிவுகுறித்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
முதன்மைக் குறிக்கோள்: வரவு செலவுத் திட்டம் 2026
புதிய அமைச்சர்களின் முதல் மற்றும் முதன்மைக் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்: "ஆண்டின் இறுதிக்குள் பிரான்சிற்கு ஒரு வரவு செலவுத் திட்டத்தைக் கொடுப்பது". நாட்டின் வரலாறு காணாத அரசியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாக இது பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 14:30 மணிக்குப் புதிய அமைச்சர்களுடன் தலைமை அமைச்சர் கலந்துரையாடல் நடத்த உள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்து, உடனடியாக அதை நாடாளுமன்றத்தின் கலந்துரையாடலுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.
நம்பிக்கையின்மை அச்சுறுத்தல்
தலைமை அமைச்சர் லெகோர்னு ஒரு மெல்லிய கயிற்றின் மேல் நடப்பதைப் போன்ற நிலையில் உள்ளார். தீவிர இடது சாரிக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மதித் பனோ (Mathilde Panot), "உங்கள் அலுவலகப் பெட்டிகளை அவசரமாகத் திறந்துவிடாதீர்கள், நம்பிக்கையின்மை முடிவு வருகிறது," என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார். தீவிர வலது சாரிக் கட்சித் தலைவர் மரின் லூ பென் (Marine Le Pen), இன்றே (திங்கட்கிழமை) நம்பிக்கையின்மை முடிவைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், லெகோர்னு அரசின் ஆயுள், சோசலிஸ்ட் கட்சியின் கையில்தான் உள்ளது. அவர்களுடன் மட்டுமே தலைமை அமைச்சர் தொடர்ந்து உரையாடல் நடத்தி வருகிறார்.
புதிய அமைச்சரவையின் கலவை
இந்த அமைச்சரவை, பட்டறிவு வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் காவல்துறைத் தலைவர் லோரான் நுனெ (Laurent Nuñez) உள்துறை அமைச்சராகவும், SNCF-ன் (பிரான்ஸ் தொடருந்து ) தலைவர் ஜோன் -பியர் ஃபரான்டூ (Jean-Pierre Farandou) தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசில் இணைந்த வலது சாரிக் கட்சியான 'லெஸ் ரிபப்ளிகன்ஸ்' (LR) கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்களையும், அவர்கள் பதவியேற்ற உடனேயே கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் கொண்டவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாமென லெகோர்னு விரும்பியதாகக் கூறப்பட்ட நிலையில், ஜெரால்டு தர்மான் (Gérald Darmanin) மீண்டும் அறத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சோசலிஸ்ட் கட்சியின் விதிப்புகள்: உயிர் பிழைக்குமா அரசு?
அரசைக் காப்பாற்றும் ஒரே ஆற்றலாக விளங்கும் சோசலிஸ்ட் கட்சி (69 உறுப்பினர்கள்), தாங்கள் துணை நிற்பதற்கு மிகக் கடுமையான விதிப்புகளை வைத்துள்ளது.
பிணக்கத்திற்குரிய 49-3 சட்டப் பிரிவைப் பயன்படுத்தமாட்டோம் என அரசு உறுதியளிக்க வேண்டும்.
மக்களின் வாங்கும் திறனைப் பாதுகாக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஓய்வூதிய சீர்திருத்தத்தை உடனடியாகவும், முழுமையாகவும் இடைநிறுத்தம் செய்ய வேண்டும்.
இந்த விதிப்புகள் ஏற்கப்படாத வரை, தாங்களும் நம்பிக்கையின்மை முடிவிற்குத் துணை நிற்போம் என அக்கட்சி எச்சரித்துள்ளது. "தற்போதைக்கு நல்ல அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை," என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பியர் ஜூவெ கூறியுள்ளா
அடுத்த சில நாட்களில் தலைமை அமைச்சர் லெகோர்னு ஆற்றவிருக்கும் கொள்கை விளக்க உரையை (déclaration de politique générale) பொறுத்தே, சோசலிஸ்ட்டுகள் தங்கள் இறுதி முடிவை எடுப்பார்கள். அதுவரை, லெகோர்னுவின் புதிய அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.


