ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளுடன் பேரம்? இயக்குநர் கௌதமன் பரபரப்பு குற்றஞ்சாட்டு!
தொகுதிக்கு ரூ.10 கோடி என தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி செலவிட்டு அரசியல் கட்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக ஸ்டெர்லைட் ஆலை பேரம் பேசி வருவதாக இயக்குநர் கௌதமன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளுடனும் பேச்சுசார்த்தை நடத்தி ஆலையை திறக்க தீவிரமாக முயன்று வருகின்றனர் என திரைப்பட இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விமானம் மூலம் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளுடன் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
வரும் தேர்தலில், தொகுதிக்கு ரூ.10 கோடி என தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி செலவிட்டு அரசியல் கட்சிகளுக்கு உடன் நிற்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை பேரம் பேசி வருகிறது. இதற்கு ஆளும் திமுக அரசு அடிபணிய போகிறதா? அதிமுக ரகசிய உடன்படிக்கை செய்யப் போகிறதா? மத்திய அரசு ரகசிய திட்டத்தை அரங்கேற்ற போகிறதா? என தெரியவில்லை. தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மறுபடியும் ஸ்டெர்லைட் ஆலை வரும்," என்று அவர் எச்சரித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "ஸ்டெர்லைட் ஆலை எந்த கட்சியுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்த கட்சியை அடியோடு மண்ணிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். லஞ்சம், கொலை, கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. மயிலாடுதுறையில் முதல்வர் இருக்கும்போது திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து வெட்டி கொலை செய்கின்றனர். சென்னையில் துணை முதல்வர் இருக்கக்கூடிய தொகுதியில் 4 கிலோ கஞ்சா எடுக்கின்றார்கள். எதிர்கால தலைமுறைகளை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயல்களை திமுக, அதிமுக செய்து வருகிறது," என்று அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அத்துடன், "மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகா அரசிடம் அறிக்கை கேட்பதே நேர்மையற்ற நிலைபாடு, பச்சை துரோகம். கர்நாடகாவில் அணை கட்டப்பட்டால் அதில் இருந்து 20% தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது.
இதையும் படிங்க: எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு!
SIR கடைசி நேரத்தில் கொண்டுவரப்படுவது சந்தேகத்திற்குரியது, ஆனால் அதே நேரத்தில் திமுக நேர்மையானது அல்ல. இதில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் உள்நோக்கம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பீகாரில் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அவ்வாறு நடக்கவிட கூடாது” என்று இயக்குநர் கௌதமன் கூறினார்.


