அகதிகள் குடியேற்றத்திற்கு 'பொறி ' வைக்கும் பிரித்தனியா!
ஐரோப்பாவின் மிகக் கடுமையான 'டேனிஷ் மாதிரி ' அமலாகிறதா?
அகதிகள் குடியேற்றத்திற்கு 'பொறி ' வைக்கும் பிரித்தனியா! ஐரோப்பாவின் மிகக் கடுமையான 'டேனிஷ் மாதிரி ' அமலாகிறதா?
பிரித்தானியா தனது குடியேற்றம் மற்றும் அகதிகள் கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதற்காக, ஐரோப்பாவிலேயே மிகவும் கண்டிப்பான விதிகளைக் கொண்ட 'டேனிஷ் மாதிரி ' (Danish Model) எனப்படும் டென்மார்க் நாட்டின் கொள்கைகளைப் பிரித்தானியா ஆராய்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், இந்த மாதத்திற்குள் குடியேற்றம்குறித்த முக்கிய சீர்திருத்தங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரித்தானியாவுக்குள் குடியேறுபவர்களைக் கவரும் அம்சங்களைக்(சலுகைகள்- வசதிகள் ) குறைப்பது மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்க உரிமை இல்லாதவர்களை எளிதாக வெளியேற்றுவது.
இந்தத் திட்டத்திற்காக, கடந்த மாதம் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க் தலைநகர்) தனது அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை அனுப்பி, அங்குள்ள நடைமுறைகளை ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார் ஷபானா மஹ்மூத்.
டென்மார்க்கின் குடியேற்றக் கொள்கை ஐரோப்பாவிலேயே மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது. அதன் சில முக்கிய அம்சங்கள்:
தற்காலிக தஞ்சம் மட்டுமே: போரினால் பாதிக்கப்பட்டுத் தஞ்சம் கோருபவர்களுக்கு, டென்மார்க்கில் தற்காலிகமாகத் தங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களது சொந்த நாடு பாதுகாப்பானது என்று டென்மார்க் அரசாங்கம் அறிவித்தவுடன், அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும். கடினமான நிபந்தனைகள்: டென்மார்க்கில் நீண்ட காலமாக வசிப்பவர்கள், நிரந்தர வசிப்பிட உரிமை பெறுவதற்கான கால அளவை அதிகரித்துள்ளது. அத்துடன், முழு நேர வேலையில் இருப்பது கட்டாயம் என்பது போன்ற புதிய நிபந்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைகளால், டென்மார்க்கில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாற்றுச் சரிவைக் கண்டுள்ளது.
டென்மார்க் அளவுக்குப் பிரித்தானியா கடுமையான விதிகளை (குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்களை வரவழைப்பது) கொண்டு வராது எனப் பிபிசி (BBC) செய்தி நிறுவனம் கூறினாலும், ஷபானா மஹ்மூத் "மிகவும் கட்டுப்பாடான பாதையை" தேர்ந்தெடுப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
ஆச்சரியமூட்டும் விதமாக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தின் இந்தத் திட்டத்திற்கு அவரது சொந்தக் கட்சியான 'தொழிற்கட்சி' (Labour Party) எம்.பி.க்களிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "டேனிஷ் கொள்கைகளைப் பிரித்தானியாவில் அமல்படுத்துவதை நாங்கள் எதிர்ப்போம்" என்று சில எம்.பி.க்கள் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.


