நியூயார்க்கில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்ததில், சீமென்ஸ் CEO மற்றும் குடும்பத்தினர் பலி!
அவசரகால மற்றும் போலீஸ் படகுகள் ஆகியவை ஆற்றில் மீட்பு பணியில்

வியாழக்கிழமை நியூயார்க் நகரின் ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட அதில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் அடங்குவதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். விபத்தில் கொல்லப்பட்டவர்களை அதிகாரிகள் இன்னும் பகிரங்கமாக அடையாளம் காணவில்லை என்றாலும், ஸ்பெயினில் உள்ள சீமென்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் ஆகியோர் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து குறித்து காவல்துறை அறிக்கை!
நியூயார்க் காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் கூறுகையில், நியூயார்க் ஹெலிகாப்டர் டூர்ஸால் இயக்கப்படும் பெல் 206 ஹெலிகாப்டர், பிற்பகல் 3 மணியளவில் நகர மைய ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து புறப்பட்டு, ஹட்சன் மீது வடக்கு நோக்கி பறந்தது. அது ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தை அடைந்தபோது தெற்கு நோக்கித் திரும்பி, சில நிமிடங்களுக்குப் பிறகு விபத்திற்கு உள்ளானது. பிற்பகல் 3:15 மணியளவில் லோயர் மன்ஹாட்டன் அருகே தலைகீழாக தண்ணீரில் மோதி நீரில் மூழ்கியது என்று டிஷ் மேலும் கூறினார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விபத்தின் காணொளிகளில், ஒரு பெரிய பொருள் ஆற்றில் விழுவது போல் தோன்றியது. அவசரகால மற்றும் போலீஸ் படகுகள் ஆகியவை ஆற்றில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.