சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடரும் சிக்கல்
.

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், மார்ச் 19 அல்லது 20ஆம் தேதியன்று பூமிக்குத் திரும்பலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 9 மாதங்களுக்கும் மேலாகத் தங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஜூன் 5, 2024 அன்று விண்வெளிக்குச் சென்றனர்.
அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்குத் திரும்பி வர வேண்டியது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது பல பிரச்னைகளைச் சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவது தாமதமானது.
இந்த ராக்கெட் சரியான நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டால், நிக் ஹாக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ், புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் மார்ச் 19ஆம் தேதியன்று தங்கள் பயணத்தை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தொடங்குவார்கள். அவர்கள் மார்ச் 20 அல்லது 21 அன்று பூமிக்குத் திரும்புவார்கள்.
சுனிதாவும் வில்மோரும் அப்போது 288 நாட்கள் விண்வெளியில் தங்களின் காலத்தைக் கழித்தவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் ஹாக்கும், கோர்புனோவும் 173 நாட்கள் விண்வெளியில் தங்கியவர்களாக இருப்பார்கள்.
தனி விண்கலன் ஒன்றில் நீண்ட நாட்கள் விண்ணில் தங்கியிருந்த விண்வெளி வீரர், ஃப்ராங்க் ரூபியோ. அவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் 371 நாட்கள் தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது.
அவர் சென்ற சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓர் ஆண்டுக்கும் மேலாக அவர் விண்வெளியிலேயே இருக்க நேரிட்டது. பிறகு மற்றொரு சோயுஸ் விண்கலன் மூலமாக அவர் வீடு திரும்பினார்.