நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் போராட்டம்! மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு!
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள நிலையில், தற்போது இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று அண்ணா ஆட்சி காலம் முதல் தமிழ்நாடு கூறிவருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி வருகிறார். இதற்கு ஆளும் திமுக மட்டுமல்லாமல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக மக்களவையில் தமிழ்நாடு எம்பிக்கள் நேற்று குரல் கொடுத்த போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த வார்த்தை சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, தமிழ்நாடு எம்பிக்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனையடுத்து, தர்மேந்திர பிரதான் அந்த வார்த்தையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவைக் குறிப்பில் இருந்து அந்த வார்த்தை நீக்கப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்தின் இந்த அமர்வின் 2-ம் நாளான இன்று, மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை திணிப்பதை கண்டித்தும், அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாணவர்களின் உரிமையை பறிக்காதே என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என கோஷங்களை எழுப்பியும் முழக்கமிட்டனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.