பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள்!தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த சத்சர நிமேஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில்

பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன - சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தல்
பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கிறது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த சத்சர நிமேஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவர் பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில்,
கடந்த 2 ஆம் திகதி பொலிஸ்காவலின் கீழ் பதிவான சத்சர நிமேஷின் உயிரிழப்பு, கடந்த பல ஆண்டுகளாகப் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்களின் பட்டியலில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி இச்சம்பவமானது இலங்கையின் பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகள் எத்தகைய மோசமான, மனிதாபிமானமற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மீண்டுமொரு முறை உணர்த்துகிறது.
இருப்பினும் உயரதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த உண்மையை உணரமுடியவில்லை அல்லது அவர்கள் உணர மறுக்கிறார்கள்.
பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மாறாக அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும்போது, சில மணித்தியாலங்களின் பின்னரோ அல்லது சில நாட்களின் பின்னரோ குறித்த சம்பவம் பற்றிய விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைப்பதால் எவ்வித பயனுமில்லை.
ஏனெனில் அவ்வேளையில் பெருமளவான ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ அல்லதுசாட்சியங்கள் சிதைக்கப்பட்டோ இருக்கக்கூடும். அதுமாத்திரமன்றி பொலிஸ்காவலின் கீழிருந்த பிறிதொரு நபர் அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலும், அவர் தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக சாட்சியமளிக்க முன்வருவது மிகக்கடினமானதாகும்.
கடந்த பல ஆண்டுகளாக பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். இருப்பினும் அச்சம்பவங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மிக அரிதாகும்.
மேலும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதையும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கின்றன என்பதையும் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளார்.