நிலவில் மொபைல் டவர்! Nokia படைக்கும் புதிய வரலாறு.. பின்னால் இருக்கும் அசத்தல் காரணம் .
நோக்கியாவின் 4G LTE நெட்வொர்க் அமைப்பை அதீனா (Athena) ராக்கெட் மூலம் நாசா ஏவியிருக்கிறது.

நிலவில் மொபைல் டவரை நோக்கியா நட இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலவு தொடர்பான ஆய்வுகள் தீவிரமடையும் என்றும், மனிதர்கள் நிலவுக்கு சென்று குடியேறுவதும் சாத்தியமாகும் என்றும் சொல்லப்படுகிறது.
நோக்கியாவின் 4G LTE நெட்வொர்க் அமைப்பை அதீனா (Athena) ராக்கெட் மூலம் நாசா ஏவியிருக்கிறது. இதன் மூலம் விரைவான தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும்.
2028ம் ஆண்டு மனிதர்கள் விண்வெளிக்கு போக இருக்கிறார்கள். இந்த பயணத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. விண்வெளி ஆய்வாளர்களின் எதிர்கால நோக்கம், செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமிப்பதுதான். பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதைவிட, நிலவிலிருந்து செவ்வாய்க்கு போவது ரொம்ப ஈஸியானது. அதாவது செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான எரிபொருள் நிலவில் இருந்து எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே நிலவில் மனித குடியிருப்பை உருவாக்கி அதன் பின்னர் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு போக திட்டமிடல் நடந்து வருகிறது. இதற்காக நிலவை சல்லடை போட்டு விண்வெளி ஆய்வாளர்கள் அலசி வருகின்றனர். ஏராளமான ரோவர்களும் லேன்டர்களும் நிலவில் நீர் இருக்கும் பகுதியை தேடி வருகிறது. நீர் இருக்கும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டால், நீரில் இருந்து ஹைட்ரஜனை மட்டும் தனியாக பிரித்து அதனை எரிபொருளாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். இதற்காக அங்கு செயல்பட்டு வரும் ரோவர்களுக்கு உதவிக்காக நிலவில் முதல் முறையாக மொபைல் டவர் அமைக்கப்பட இருக்கிறது. இந்த டவர் நிலவில் உள்ள அனைத்து ரோவர்களையும் கனெக்ட் செய்யும். ரோவரில் இருந்து வரும் தகவல்களை டவர் பெற்று அது பூமிக்கு அனுப்பும். எனவே நிலவிலிருந்து தகவல்களை பெறுவது மிகவும் எளிதானதாகவும் விரைவானதாகவும் மாறும்.
இது வெறும் தொடக்கம் தான் இதே போன்று மேலும் சில டவர்களை அமைக்க நாசா திட்டமிட்டு வருகிறது. இந்த டவர்கள் பூமியிலிருந்து ரோவர்களுக்கு அனுப்பும் சிக்னல்களை ரிசிவ் செய்து, ரோவர்களுக்கு சீரான தகவல்களை அனுப்பும். எனவே பூமியிலிருந்து நிலவில் இருக்கும் ரோவர்களை நம்மால் துல்லியமாக கட்டுப்படுத்த முடியும். நிலவுக்கு அனுப்பப்படும் ஆய்வு கருவிகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று லேண்டெர், அதாவது நிலவில் தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவி. இது தகவல்களை சேகரித்து நிலவுக்கு மேல் வட்டமடித்துக் கொண்டிருக்கும் 2வது கருவியான செயற்கைக்கோளுக்கு அனுப்பும். செயற்கைக்கோள் பூமிக்கு அனுப்பும். இந்த செயல்முறையை எளிதுப்படுத்தவே தற்போது நிலவில் மொபைல் டவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. செல்போன் பயன்பாட்டில் நோக்கியா மிகப்பெரிய புரட்சியை செய்தது. அதேபோன்ற ஒரு சாதனையை தற்போது விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்ய இருக்கிறது.