காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உரிமை கோரும் டிரம்ப் மற்றும் பைடன்.
.

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த விவகாரத்தில் டிரம்பின் ஆலோசகர்கள், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போகும் அதிபர் பைடனின் குழு மற்றும் கத்தார்-எகிப்திய பேச்சுவார்த்தையாளர்களுடன் இணைந்து பணியாற்றினர்.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இருவருமே (டிரம்ப் மற்றும் பைடன்) உரிமை கோருகின்றனர்.
ஆனால் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் சவால்கள் இருக்கும், குறிப்பாக பிந்தைய கட்டங்களை இறுதி செய்வதில். அதில் பைடன் கூறியது போல 'போருக்கு நிரந்தர முடிவு' என்பதும் அடங்கும்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து அங்கு மாற்றியது உள்ளிட்ட இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அமல்படுத்தினார்.
அவரது நிர்வாகம் இரான் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, பொருளாதாரத் தடைகளை அதிகரித்தது மற்றும் இரானின் மிக சக்தி வாய்ந்த ராணுவத் தளபதியான, ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்றது போன்ற நடவடிக்கைகளைக் கூறலாம்.
டிரம்பின் கொள்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விளைவைக் கொண்டிருந்தன மற்றும் பாலத்தீனர்களை தனிமைப்படுத்தின என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவுக்கும் இடையிலான ராஜ்ஜிய உறவுகளை இயல்பாக்கும் வரலாற்று ஒப்பந்தமான 'ஆபிரகாம் ஒப்பந்தங்கள்' விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.
ஆனால் இஸ்ரேல், எதிர்காலத்தில் ஒரு சுதந்திர பாலத்தீன அரசை ஏற்றுக்கொள்ளும் என்ற அரபு நாடுகளின் முந்தைய நிபந்தனை இதில் சேர்க்கப்படவில்லை. இருந்தும் ஆபிரகாம் ஒப்பந்தம் சாத்தியமானது.
காஸா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், "இந்தப் பிராந்தியத்தில் 'வலிமையின் மூலம் அமைதியை' ஊக்குவிப்பேன், ஆபிரகாம் ஒப்பந்தங்களை செயல்படுத்துவேன்" என்றும் டிரம்ப் கூறினார். இதன் பொருள் சௌதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதாக இருக்கலாம்.