யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்!
உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ளது.

நீதிமன்ற அறிவுறுத்தலின் பின்பே ஏனையவற்றுக்கு விநியோகம்
தபால் மூல வாக்காளர் அட்டைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சிச் சபைகளுக்கு மட்டுமே தற்போது தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பான நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்ததும் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகத்துக்காக அவற்றை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளே இன்று விநியோகிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 64 பேர் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று 768 தபால் மூல வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்படவுள்ளன. பருத்தித்துறை நகர சபையில் 463 பேரும், வேலணை பிரதேச சபையில் 305 பேரும் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்த பின்னர் அவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.