மனதைத் தொட்ட அற்புதமான திரை அனுபவம்... ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!
ராஜமௌலியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அபிஷன்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான ’டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வெளியானது முதல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜிவிந்த் இயக்கியுள்ள இத்திரைப்படமானது இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பி வரும் ஒரு குடும்பம் சென்னையில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறுகிறது.
அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் அதனை அந்த குடும்பம் கையாளும் விதத்தையும் நகைச்சுவையாக பேசுகிறது ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இந்த கருத்தை பேசியிருப்பதால் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தை பாராட்டியிருந்தார். திரை பிரபலங்கள் மட்டுமல்லாது அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல் ஆளுமைகளும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி எனும் மிக அற்புதமான திரைப்படத்தைப் பார்த்தேன். மனதிற்கு நெருக்கமான இதமான படமாக உள்ளது. அதே நேரத்தில் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையும் நிரம்பியிருக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்வத்துடன் பார்த்தேன். அபிஷன் ஜீவிந்த்தின் எழுத்து மற்றும் இயக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்ததற்கு நன்றி. தவறவிடக்கூடாத திரைப்படம்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜமௌலியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது பதிவில், ”இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் கூடிய அவரது படங்களை நான் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான உலகங்களை உருவாக்கியவர் என் பெயரை ஒரு நாள் உச்சரிப்பார் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. நீங்கள் இந்த சிறுவனின் கனவை வாழ்க்கையை விடப் பெரிதாக மாற்றி விட்டீர்கள்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியாகி இருபது நாட்களாகியுள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக வசூல் செய்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த படத்தில் சசிகுமார், சிம்ரனுடன் யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.