புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை – விமல் வீரவன்ச
புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும்!
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை அரசாங்கம் 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பு ஊடாக பொதுக்கள் மீது சுமத்தியுள்ளது. தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை மீள அறவிடுவதற்கு இதுவரையில் முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. போலியான வாக்குறுதிகளை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது.
2.5 மில்லியன் டொலர் மோசடிக்கு நடந்தது என்னவென்பது தெரியவில்லை. இந்த மோசடி விடயத்தில் அரச அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பாதுகாக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகளுக்கு மாத்திரம் அரசாங்கம் முன்னுரிமை வழங்குகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொத்து விவகாரம் பற்றி ஆராய்வதில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிலும் தவறானது. புலிகள் அமைப்பின் தேவைக்காகவே முப்படைகளின் முன்னாள் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேசியத்துக்கு எதிராக செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றார்.


