தமிழ்ச்செல்வன் (தினேஷ்)இயக்கத்தின் ஆலமரம்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது.
தமிழ்ச்செல்வன் (தினேஷ்)இயக்கத்தின் ஆலமரம்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.
சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.
உணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா? அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா?” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.
கதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று.
எல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.
தலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.
ஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின் போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம் வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.
ஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”
உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.
தமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான். முக்கிய சந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.
ஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச் சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நா ஊறுபட்டுவிடக்கூடாது, கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.
எல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.
அடுத்த சுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டு விற்பன்னர்களுடன் களைகட்டும் போட்டி, இருள் சூழ்ந்த வேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்த பின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்து முடியும் போட்டி.
தமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம் வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச் சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம் போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில் பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.
அதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.
அடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்ய வேண்டி வந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற் பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.
யாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர் பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப் பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.
தென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்ற போதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.
தலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.
மூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.
இந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.
அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுகடிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.
எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.
“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே? காணவில்லையே? வின்சனுக்கு என்னவானது? அக்காவிற்கு, பிள்ளைகளுக்கு என்னவானது? நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.
ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.
அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.
வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.
இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.
இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர். தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.
மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள்.
- ஊர்குருவி.


