ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்கள் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் - பாரிஸ் தப்பியது!
லண்டன் ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெர்லின் உள்ளிட்ட ஐரோப்பா கண்டத்தின் மிக முக்கியமான விமான நிலையங்கள், ஒரு மாபெரும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
பாரிஸ் , செப். 20: ஐரோப்பாவின் வான்வழிப் போக்குவரத்து, இன்று (சனிக்கிழமை) ஒரு பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. லண்டன் ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெர்லின் உள்ளிட்ட ஐரோப்பா கண்டத்தின் மிக முக்கியமான விமான நிலையங்கள், ஒரு மாபெரும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல், பயணிகளின் செக்-இன் (Check-in) மற்றும் பயணப் பெட்டிகளை ஒப்படைத்தல் (Baggage drop-off) செயல்முறைகளுக்காகப் பயன்படுத்தப்படும் "MUSE" என்ற மென்பொருளின் மீது இந்தச் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், கணினி அமைப்புகள் செயலிழந்து, விமான நிலைய ஊழியர்கள் ஒவ்வொரு பயணிகள் விபரத்தையும், பயணப் பெட்டிகளையும் கையால் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
லண்டன், பிரஸ்ஸல்ஸில் பெரும் பாதிப்பு
தாக்குதலின் மையமாக, லண்டன் ஹீத்ரோ மற்றும் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தச் சைபர் தாக்குதல், விமானங்களின் அட்டவணையில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இது, தாமதங்களுக்கும், விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும் வழிவகுக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவரை, குறைந்தது 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 17 விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகப் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிலையமான லண்டன் ஹீத்ரோவில் நிலைமை இன்னும் மோசம். விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான யூரோகண்ட்ரோல் (Eurocontrol), இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை முழுவதும் ஹீத்ரோவிலிருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் பாதியை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பயணிகள், தங்களின் விமானத்தின் நிலையை அந்தந்த விமான நிறுவனங்களுடன் உறுதி செய்துகொள்ளுமாறும், செக்-இன் நடைமுறைகளுக்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால், மிக முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சைபர் தாக்குதலால் பாரிஸின் முக்கிய விமான நிலையங்களான சார்ல்ஸ் து கோல் (Roissy-Charles de Gaulle) மற்றும் ஓர்லி (Orly) ஆகியவற்றை நிர்வகிக்கும் ADP குழுமம், தங்களின் அமைப்புகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த "MUSE" மென்பொருளை உருவாக்கிய கொலின்ஸ் ஏரோஸ்பேஸ் (Collins Aerospace) நிறுவனம், பிரச்சினையை விரைவில் சரிசெய்யப் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை, டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இது போன்ற சைபர் தாக்குதல்கள் சமீப வருடங்களில் உலகளவில் அதிகரித்துள்ளன. பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான தேல்ஸ் (Thales) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டும், விமானப் போக்குவரத்துத் துறையில் 27 Ransomware தாக்குதல்கள் நடந்துள்ளதாகக் கூறுகிறது. இது, முந்தைய ஆண்டைவிட 600% அதிகமாகும்!
கடந்த ஜூலையில் ஒஸ்திரேலியாவின் குவாண்டாஸ் (Qantas) விமான நிறுவனமும், டிசம்பர் 2024-ல் ஜப்பான் ஏர்லைன்ஸும் (Japan Airlines) இதே போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகின. இன்றைய சம்பவம், டிஜிட்டல் உலகில் பயணிக்கும் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக நிரூபித்துள்ளது.


