காதல் நகரமான பாரிஸின் அழகிய வீதிகளுக் கீழே ஒரு மிகப்பெரிய இருண்ட நகரம்!
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாரிஸ் நகரம் ஒரு பெரிய சுகாதார சீர்கேட்டைச் சந்தித்தது.
பாரிஸ் நகரத்திற்கு கீழே ஒரு இருண்ட உலகம்: 'கடாகோம்ப்' (Les Catacombes) நிலத்தடிப் பாதைகளின் மர்மங்கள்!
காதல் நகரமான பாரிஸின் அழகிய வீதிகளுக்கும், கண்கவர் கட்டிடங்களுக்கும் கீழே சுமார் இருபது மீட்டர் ஆழத்தில் ஒரு மிகப்பெரிய இருண்ட நகரம் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆறு மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கி நிற்கும் இந்த நிலத்தடிப் பாதைகள், பிரெஞ்சு வரலாற்றின் மிக முக்கியமான, அதேசமயம் சற்று திகிலூட்டும் ஒரு பக்கமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாரிஸ் நகரம் ஒரு பெரிய சுகாதார சீர்கேட்டைச் சந்தித்தது. நகரத்தில் இருந்த மயானங்கள், குறிப்பாக 'Cimetière des Innocents (மயானம்)ல் நிரம்பி வழிந்தது. இடப்பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடல்கள் மழையில் வெளியே வரத் தொடங்கின. இதனால் துர்நாற்றம் வீசியதோடு, நோய்த்தொற்று பரவி சுற்றியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அப்போதைய அரசாங்கம் முடிவெடுத்தது.
பாரிஸ் நகரக் கட்டிடங்களை உருவாக்குவதற்காக கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட பழைய சுண்ணாம்புச் சுரங்கங்கள் (carrières de calcaire) நகரத்திற்கு அடியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு காலியாகக் கிடந்தன. இந்த இருண்ட சுரங்கங்களுக்குள் மயானங்களில் இருந்த மனித எலும்புகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக, நள்ளிரவு நேரங்களில் வண்டிகளில் எலும்புக்கூடுகள் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டு இந்த நிலத்தடிப் பாதைகளில் அடுக்கப்பட்டன. மண்டை ஓடுகளும், எலும்புகளும் மிக நேர்த்தியான முறையில் சுவர்களைப் போல அடுக்கி வைக்கப்பட்ட விதம் இன்றும் பார்ப்போரை வியக்க வைக்கிறது.
இந்த நிலத்தடிப் பாதைகள் வெறும் கல்லறைகளாக மட்டும் இருக்கவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, பிரெஞ்சு எதிர்ப்புப் படையினர் (La Résistance) ஜெர்மன் படைகளுக்குத் தெரியாமல் ரகசியமாகத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த இருண்ட பாதைகளைத் தான் தங்களின் புகலிடமாகப் பயன்படுத்தினர். சுவாரசியமாக, இதே பாதைகளின் இன்னொரு பகுதியில் ஜெர்மன் படைகளும் தங்களின் ரகசியப் பதுங்கு குழிகளை அமைத்திருந்தனர் என்பது வரலாற்றின் ஒரு வியப்பான முரண்பாடு.
பல நூறு கிலோமீட்டர்கள் நீண்டு கிடக்கும் இந்த நிலத்தடிப் பாதைகளின் ஒரு சிறு பகுதியை மட்டுமே இன்று பொதுமக்கள் ஒரு அருங்காட்சியகமாக (musée) பார்வையிட முடியும். மற்ற பகுதிகளுக்குள் நுழைவது சட்டப்படி குற்றமாகும். ஆனாலும், சில சாகச விரும்பிகள் (cataphiles) காவல் துறையினருக்குத் தெரியாமல் ரகசியமாக இந்தத் தடைசெய்யப்பட்ட பாதைகளுக்குள் நுழைந்து, நிலத்தடியில் திரைப்படங்கள் பார்ப்பது, பார்ட்டிகள் வைப்பது போன்ற செயல்களில் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். பளபளக்கும் பாரிஸ் நகரத்தின் கீழே, இன்றும் அமைதியாக பல மர்மங்களைச் சுமந்து நிற்கிறது இந்த எலும்புக்கூடுகளின் இருண்ட நகரம்.
- சிவா சின்னப்பொடி


