தமிழரசுக்கட்சியின் 'நிராகரிக்கப்பட்ட' மகுடம் செல்லையா இராசதுரை.
தமிழரசு கட்சி தந்தை செல்வாவின் மறைவோடு மரணித்து விட்டது.
செல்லையா இராசதுரை: தமிழரசுக்கட்சியின் 'நிராகரிக்கப்பட்ட' மகுடமும் வரலாற்றுத் தவறுகளும்.
ஈழத்து தமிழ் அரசியலில் மட்டக்களப்பு மண் ஈன்றெடுத்த தனித்துவமான ஆளுமைகளில் செல்லையா இராசதுரை முக்கியமானவர். தந்தை செல்வநாயகத்தின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) அசைக்க முடியாத தூணாகவும் விளங்கியவர் அவர். ஆனால், தமிழ் மிதவாத அரசியலின் தலைமைத்துவம் கைமாறிய காலகட்டத்தில், தகுதியும் தியாகமும் இருந்தும் அவர் ஓரங்கட்டப்பட்ட விதம் ஈழத் தமிழ் அரசியலின் திசையையே மாற்றிய ஒரு வரலாற்றுத் துயரமாகும்.
செல்லையா இராசதுரை அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழரசுக்கட்சியின் கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். 1956 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், கிழக்கின் குரலாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் உரிமைக் குரலாகவும் ஒலித்தார்.
தந்தை செல்வா உயிருடன் இருந்த காலத்தில், அவருக்கு மிக நெருக்கமானவராக இராசதுரை விளங்கினார். வடக்கிற்கு அப்பால், கிழக்கிலும் தமிழ்த் தேசிய உணர்வை ஆழமாக விதைத்ததில் இராசதுரையின் பங்கு அளப்பரியது. அவர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னர் (1977), இயல்பாகவே அந்தத் தலைமைத்துவ இடத்தை நிரப்பக்கூடிய தகுதியும், சிரேஷ்டத்துவமும் (Seniority) செல்லையா இராசதுரைக்கு இருந்தது. செல்வாவிற்குப் பின்னர் கட்சியின் மூத்த தலைவராக அவரே விளங்கினார்.
இருப்பினும், அக்காலகட்டத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மேற்கொண்ட அரசியல் காய்நகர்த்தல்கள், இராசதுரையைத் தலைமைத்துவப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.
யாழ்ப்பாண மையவாதத் தலைமைத்துவம் (Jaffna-centric leadership), கிழக்கின் தலைவரைத் தமது தேசியத் தலைவராக ஏற்கத் தயங்கியது என்ற விமர்சனம் இன்றும் உண்டு. அமிர்தலிங்கம் உள்ளிட்ட வடபுலத் தலைவர்கள், இராசதுரையின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தி, அவரை இரண்டாம் நிலைக்குத் தள்ளினர்.(அஸ்ரப்புக்கும் இதுவே நடந்தது ) இது தனிப்பட்ட ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அல்லாமல், கிழக்கு மாகாணத்தின் அரசியல் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட்டது.
செல்லையா இராசதுரை ஓரங்கட்டப்பட்டமை, தமிழரசுக்கட்சி செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறுகளில் (Historical Blunder) ஒன்றாகும்.அவரது பிற்கால அரசியல் விமர்சனத்துக்குரியது என்றாலும் அவர் இளைஞர்களை உசுப்பேத்தி தனது எதிரிகளை கொலை செய்யும்படி தூண்டவில்லை.இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இருந்த போதிலும் ,இயக்கங்களை வளரவிடாதீர்கள் ,பிரித்தாளுங்கள் மோத விடுங்கள் என்று இந்திய உளவு துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. (இது இராசதுரை அவர்களின் இறப்பை முன்னிட்டு எழுதும் குறிப்பு . தமிழரசு கட்சி தந்தை செல்வாவின் மறைவோடு மரணித்து விட்டது . )
- சிவா சின்னப்பொடி


