பார்படோஸில் நடைபெற்ற 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை பாராளுமன்ற தூதுக் குழு பங்கேற்பு
மாநாடு பொதுநலவாய பாராளுமன்றங்களைச் சேர்ந்த 500ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களை ஒன்றிணைத்தது.
பார்படோஸில் நடைபெற்ற 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை பாராளுமன்ற தூதுக் குழு பங்கேற்பு
‘பொதுநலவாயம் – ஒரு உலகளாவிய பங்குதாரர்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 68வது பொதுநாவய பாராளுமன்ற மாநாட்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர்.
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு பொதுநலவாய பாராளுமன்றங்களைச் சேர்ந்த 500ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களை ஒன்றிணைத்தது. இதில் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, உறுப்புரிமையைக் கொண்ட சட்டவாக்கங்களுக்கிடையில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது போன்ற விடயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இலங்கைப் பாராளுமன்றத் தூதுக் குழுவில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, இயலாமையுடைய பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசிய பிராந்தியத்திற்கான முன்னோடி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான செயலாளருமான குஷானி ரோஹணதீர ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
பொதுவாநாய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவர்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினார். “விவாதமே தவிர வெறுப்பு அல்ல: சுதந்திரமான பேச்சின் விளைவாக துஷ்பிரயோகத்தை ஏற்க மறுத்தல்” என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதான பேச்சாளராக இவர் கலந்துகொண்டார். பொதுநலவாய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் வழிநடத்தல் குழுவில் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், "அரசியலில் இயலாமையுடைய பெண்களின் ஈடுபாட்டிற்கான தடைகளைத் தகர்த்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றி, இயலாமையுடைய பெண்களை அரசியல் செயற்பாடுகளில் வலுவூட்ட வேண்டிய தேவையை வலியுறுத்தினார். குறிப்பாக பொதுச் சபை விவாதத்தில் உரையாற்றிய, இவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், தேசத்தின் ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் பாலினம் சார்ந்த விடயங்களில் ஆட்சியாளர்களின் உறுதியான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், அவர் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயமும், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீரவுடன் இணைந்து பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திற்கும் தலைமைதாங்கினார். உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்றங்களிடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர் மாநாட்டின் ஓர் அங்கமாக சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் கௌரவ கிறிஸ்டோபர் டி சௌசாவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இருதரப்புக் கலந்துரையாடலில் சுற்றுலாத் துறையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த விடயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றுலா மேம்பாடு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசிய பிராந்தியத்திற்கான முன்னோடியான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, இயலாமையுடைய பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்களின் அமர்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். உள்ளடக்கத்தையும், அணுகல்தன்மையையும், இயலாமையுடைய நபர்கள் அரசியல் வாழ்வில் அர்த்தமுள்ள பங்கேற்பையும் மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களிலும் அவர் பங்களித்தார்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அவர்கள், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் பிராந்திய செயலாளர் என்ற தனது உத்தியோகபூர்வ பதவியின் அடிப்படையில் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். பிராந்தியங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும், உறுப்பு பாராளுமன்றங்களுக்குள் நிறுவனரீதியான வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பிராத்திய செயலாளர்கள் மாநாடு மற்றும் பிற நிர்வாக அமர்வுகளிலும் அவர் பங்கேற்றார்.
இலங்கைத் தூதுக்குழுவினர் செயலமர்வுகள் மற்றும் மாநாட்டு அமர்வுகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றதுடன், ஆட்சிமுறை, உள்ளடக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகளிலும் ஈடுபட்டனர். இலங்கையின் பாராளுமன்ற மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது என்ற நோக்கத்தில் இந்தப் பங்களிப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், ஆட்சிமுறைக்காக டிஜிட்டல் மாற்றத்தைப் பயன்படுத்துதல், பாராளுமன்றங்கள் மற்றும் தேர்தல்களில் நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், மற்றும் காலநிலை மாற்றத்தை உலகளாவிய சுகாதார சவாலாகக் கையாளுதல் போன்ற உலகளாவிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான உயர்மட்ட செயலமர்வுகள் மற்றும் நிகழ்வுகள் பலவும் 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.
இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பு, பொதுநலவாயத்தின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு தேசத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும், உலகளாவிய பாராளுமன்ற சமூகத்தில் ஜனநாயகம், நல்லாட்சி, பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அதன் செயலூக்கமான ஈடுபாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


