உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொலைகாரர்களும்,கொள்ளைக்காரர்களும் ஒரு போதும் குற்றத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள், பங்காளிகளும் விமாட்டார்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் பிரதான பொறுப்புதாரிகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நாளை இந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி எதை சொல்ல போகிறார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 தினத்துக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார்.
குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை அறிவிக்காவிடின் ஏப்ரல் 21 தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் 7 விசாரணைகளும், சர்வதேச மட்டத்தில் 4 விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த விசாரணைகளிலும் பிரதான சூத்திரதாரி யாரென்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விசாரணைகளில் குறிப்பிடப்படாத விடயங்களையா ஜனாதிபதி இவ்விரு தினங்களில் குறிப்பிட போகிறார் என்பதை பார்த்துக்கொண்டிக்கிறோம்.
ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அது பேராயரை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும்.
குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதி சஹ்ரானை கொண்டு நௌபர் மௌலவி இந்த தாக்குதல்களை நடத்தினார் என்பதை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தேன்.
நியூசிலாந்து நாட்டில் பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் நௌபர் மௌலவியின் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மேற்கத்தேயர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் கூட்டாக ஒன்றிணைந்து இந்த விடயத்தை குறிப்பிட்டு சுய உடன்படிக்கை செய்துக் கொண்டுள்ளனர். இவ்விடயம் விசாரணைகளில் வெளிவந்தன.
இவ்வாறான நிலையில் குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நீதியரசர் விஜித் மலல்கொட விசாரணை ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, இமாம் அறிக்கை மற்றும் அல்விஸ் அறிக்கை ஆகியன உரிய தரப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எந்த அறிக்கையிலும் 'அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக' குறிப்பிடப்படவில்லை.அனைத்து அறிக்கைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்தனர். மேற்கொள்ளப்பட்ட 4 சர்வதேச மட்ட விசாரணைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நௌபர் மௌலவி, மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவரை பயங்கரவாதிகளாக குறிப்பிட்டு அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.