இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. திட்டமிட்டு தாக்கியதாக உக்ரைன் பகீர்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இந்திய மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ரஷ்யா, வேண்டும் என்றே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ரஷ்யா அந்த நாடு மீது போர் தொடுத்தது.
இந்திய நிறுவனத்தின் மீது தாக்குதல்,
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்ததால், ரஷ்யாவுடன் சரி சமமாக மல்லுக்கட்டிய உக்ரைனுக்கு டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆன பிறகு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் உக்ரைனுக்கான நிதி உதவி, ஆயுத உதவி நிறுத்தப்படும் என மிரட்டினார். இதையடுத்து உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது. ரஷ்யாவும் இதற்கு முதலில் ஒப்புக்கொண்டது.
எனினும், ரஷ்யா விதித்த நிபந்தனைகள் உள்ளிட்டவை காரணமாக ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஈடுபடுவதில் இழுபறி ஏற்படட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
வேண்டும் என்றே குறிவைத்து தாக்குதல்
ரஷ்யா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் உள்ள குசும்(Kusum) என்ற மருந்து நிறுவனத்தின் குடோவுன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்கியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக கூறி வரும் ரஷ்யா, இந்திய வணிகங்களின் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த மருந்துகளை அழித்து இருக்கிறது" என்று கூறப்பட்டு உள்ளது.
குசும் என்ற மருந்து நிறுவனம், இந்திய தொழில் அதிபர் ராஜீவ் குப்தாவிற்கு சொந்தமானது. உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். அடிப்படை மருந்துகளை உக்ரைன் முழுவதும் இந்த நிறுவனம் விநியோகம் செய்து வருவதால், இந்த தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. டிரோன் மூலமாக நேரடியாக குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைனிய அதிகாரிகள் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒப்பந்தத்தை மீறி...
உக்ரைன் இது தொடர்பான தகவலை வெளியிடும் முன்பே உக்ரைனுக்கான பிரிட்டன் தூதர் தனதுஎக்ஸ் தளத்தில் இந்த தாக்குதல் தொடர்பான தகவலை வெளியிட்டு இருந்தார். அவர் கூறுகையில், "கீவ் நகரில் உள்ள மருந்து நிறுவன பண்டகசாலையை ரஷ்ய டிரோன்கள் முற்றிலும் அழித்துவிட்டன. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளின் இருப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதை உக்ரைனும் ரஷ்யாவும் கடந்த மாதம் ஒப்புக்கொண்டன. எனினும், இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை தொடர்வதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. போருக்கான காலம் இது இல்லை எனவும் இந்தியா தொடர்ந்து சர்வதேச மன்றங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்த பிறகு, ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா மாறியது. பிற நாடுகளை விட சலுகை விலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.