புலிகள் இல்லாத காட்டில் எலிகளும் நரிகளும் உருட்டி விளையாடுகின்றன-ஆனையிறவு உப்பும்,உப்பரசியலும்!
விகாரை, காணிஅபகரிப்பு, மேச்சல் தரை விவகாரம், பிக்குகளின் அடாவடி இவைகள் வடக்கு கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பாரிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்படவில்லையா?

ஆனையிறவு உப்பும், உப்பரசியலும்!
நேற்றைய தினம் மார்ச் 29 ஆம் திகதி தேசிய உப்பு நிறுவனத்தின் அனுசரணையில் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்ச்சாலை திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்றைய தினம் மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்ச்சாலையில் 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்திற்கு 5 மெட்ரிக் தொன் மேசை உப்பை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டிலிருந்து ஆனையிறவு உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளதாகவும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் இவ் ஆரம்ப நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் , வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தனது உரையின் போது ' மன்னாரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை விட ஆனையிறவு உப்பே தரமானது 'என குறிப்பிட்டார்.
ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்தவகையில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தேசிய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றும் போது ' எமது அரசாங்கம் பதவிக்கு வந்து 5 மாதங்களில் ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை விரைவாக திறந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்'. அவர் மேலும் குறிப்பிடும் போது ' கடந்த காலங்களில் ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பை வேறு தரப்புக்கள் கொள்வனவு செய்துஇ வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்தார்கள். ஆனால் இப்போது ஆனையிறவிலிருந்தே மக்களுக்கு உப்பை விற்பனை செய்யும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிட்டார்'.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது உரையில்இ இன்றைய நாள் உங்களுகளும், எங்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். பல இன்னல்களைச் சந்தித்தாலும் எமது மண்ணின் வாசத்தை பரப்பியது ஆனையிறவு உப்புத்தான். பலரும் விரும்பிப் பயன்படுத்தும் ஆனையிறவு மேசை உப்பு மீண்டும் உங்கள் கைகளுக்கு வரப்போகின்றது. ஆனையிறவு உப்புக்கு தனியான 'மவுசு' உண்டு. விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் உலகம் எங்கும் இது விற்பனையாகும், என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஆனையிறவில் உற்பத்தி செய்யும் உப்பு ' ரஜலுணு' என்ற சிங்களப் பெயரில் சந்தைக்கு வருகிறது என சர்ச்சையை பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் கிளப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இந்த உப்பளம் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் கீழ் ஆனையிறவு உப்பு என்றே இயங்கியது. ஆனால் இப்போது ஏன் சிங்களப் பெயர். ' யாரோ பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதானால் அதை தமிழில் கூட வைக்க முடியாத நிலை' என சமூக வலைத்தளங்களில் உப்புக் காய்ச்சுகிறார்கள். உள்ளூராட்ச்சித் தேர்தல் சமீபத்தில் வர இருப்பதால் என்பிபி அதிரடியாக ஆனையிறவு உப்புத்தொழிற்ச்சாலையை திறந்து வடக்கின் வாக்குகளை அள்ளப் போகிறார்கள் என்ற அச்சம். ஒரு ' உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தையே தொடங்குவார்கள் போலுள்ளது. காலனிய இந்தியாவில்ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்தி காலத்தில் கடல் நீரில் உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ரஜ உப்பு என்ற பெயர் கடந்த கால ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டது. உடனடியாக அந்தப் பெயரை மாற்றமுடியாமையாலே தொடர்ந்தும் அதே பெயரில் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ' ஆனையிறவு உப்பு ' என்ற பெயரிலேயே உலகெங்கும் விற்பனையாகும் என உறுதியளித்துள்ளார். இருந்தும் இந்த விடயம் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பெரிதாக்கப்படுகின்றது. இந்த பெயர் விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் போர்க் கொடி தூக்கியுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறிதரன் ஆனையிறவு உப்பளத்தை விரைவாக ஆரம்பிக்க கோரியதோடு, இந்தியாவுடன் தான் பேசியதாகவும், ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை கையேற்க இந்தியா தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுக்கு உப்புத் தொழிற்ச்சாலையை தாரை வார்க்க விரும்பிய எம்பி சிறிதரன் பெயர் மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும் அமைச்சுக்கு கடிதம் எழுதியமை வேடிக்கையானது.
உப்புச் சத்தியாகிரகம் போல் ஒரு உப்பு எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வடக்கு கிழக்கை மீட்க வேண்டும் என சில சமூக ஊடகப்போராளிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருப்பதால் என்பிபி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வரும் போது உப்பைத் தெளித்து தமது எதிர்ப்பை காட்டும் படி அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் என்பிபி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளின் முன் உப்பு பைகளை வைக்கும்படியும் கோரியுள்ளனர். ஏனெனில் அவர்கள் உப்புப் போட்டு சாப்பிடாததால் ரோஷம் அற்று பெரும்பான்மை கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இப்படியாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வினோதமான போராட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பாரிய பிரச்சினைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, சட்டவிரோத மண் கடத்தல், சுண்ணக்கல் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் தமிழ்ப் பாதாள உலக குழுக்களின் கொள்ளை மற்றும் கொலை அட்டகாசங்கள் என பல விடயங்கள் உள்ளன. ஆனால் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்ட பின்பும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக பெயரை வைத்து ' உப்பு அரசியல்' ஒன்றை தொடங்கியுள்ளனர்.
'ஆனையிறவு உப்பு ' என்ற பெயர் வைக்கப்பட வேண்டியது ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கை. ஆனையிறவு உப்பளம் வடக்கின் அடையாளம். அது தன்னகத்தே பல வரலாற்று தடங்களை பதிவு செய்துள்ளது. ஆனையிறவு உப்பளம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான இடத்தினை வகித்துள்ளது. இந்த உப்புத் தொழிற்ச்சாலையை புனரமைக்க 2010 இல் 100 மில்லியனை அப்போதைய அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. பின்னர் 2015 இல் மேலதிகமாக 125 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டது.
2018 இல் 95 வீதமான புனரமைப்பு பணிகள் முடிவடைந்திருந்தாக கூறப்படுகின்றது. எம்பி சிறிதரன் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த போது ஏன் ஆனையிறவு உப்புத் தொழிற்ச்சாலையை திறக்க கோரவில்லை. 95 வீதமான வேலைகள் முடிவடைந்த நிலையில் இத் தொழிற்ச்சாலை 7 வருடங்களாக திறக்கப்படவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் என்பிபி உப்புத் தொழிற்ச்சாலையை இயங்க வைத்துள்ளது. ஆகவே வடக்கில் இயங்காதுள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளையும் மீண்டும் நல்ல நிலையில் இயங்க வைப்பதன் மூலம் வடக்கின் இளையோருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். ' யார் குத்தியும் அரிசியானால் சரி' . உசுப்பேத்தும் அரசியலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.