''பாமக ரூல்ஸ்படி நானே தலைவர்" - அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு; கட்சி வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!
நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது.

பாமக தலைவரை பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். பொதுக்குழு கூட்டத்தில் நான் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று அறிவித்து நானே தலைவராக தொடர்வேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிவிததுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டும், கட்சியின் இளைஞர்களை வழிநடத்தவும் பாமக-வின் தலைவர் இனி நானே. அன்புமணி ராமதாஸை பாமகவின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். மற்ற பொறுப்பாளர்கள் தற்போது உள்ளவாறே தொடர்ந்து செயல்படுவார்கள்." என்று ராமதாஸ் தடாலடியாக அறிவித்தார்.
இதுதொடர்பாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு செயல் நோக்கு திட்டங்களை வகுத்து வருகிறேன். அதனை செயல்படுத்த வேண்டி, கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கருதி முழுமனதுடன் அறிவிப்பை வெளியிடுகிறேன்.
பாமகவின் நிறுவனர் மட்டுமல்லாமல் தலைவர் பொறுப்பையும் இனி நானே எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாமகவின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸை, கட்சியின் செயல் தலைவராக இன்றிலிருந்து நியமனம் செய்கிறேன். இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. எனக்கு பதவி ஆசை இல்லை. ஆனால் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்தவே இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்." என்று ராமதாஸ் கூறினார்.
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மேடையிலேயே வார்த்தைப் போர் வெடித்தது. இது அரசியல் களத்தில் பேசுபொருளானது. அப்போது அன்புமணி ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோதே மைக்கை வேகமாக வைத்து விட்டு, 'கட்சித் தொண்டர்கள் இனி என்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம்' என்று ராமதாஸ் முன்னிலையிலேயே அறிவித்ததுடன், தனது தொடர்பு எண்ணையையும் பகிரங்கமாக அறிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மறுநாள் (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் தனது தந்தையுடன் அன்புமணி ராமதாஸ் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது 'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என்று ராமதாஸை சந்தித்து பேசிய பின் அன்புமணி ராமதாஸ் விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் அன்புமணி ராமதாஸின் கட்சித் தலைவர் பதவி பறிப்பு குறித்த அறிவிப்பை ராமதாஸ் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) வெளியிட்டு கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) பாமக தலைவராக நானே தொடர்வேன் என்றும், பாமகவை தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன் சென்றும் அன்புமணி ராமதாஸ் திடீரென அறிக்கை வெளியிட்டு பாமக வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாமக தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஊமை சனங்களுக்கு சமூக நீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் ராமதாசால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.
கட்சி கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசின் வாழ்த்துகளுடன் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்.
எனது பணிகளுக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று நம்புகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது என்னுடைய கடமை. அந்த கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாமக தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும்." என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.