இந்தி மொழியை பின்வாசல் வழியாகத் திணிக்க முயற்சிக்கும் கொள்கை... தமிழர்கள் அநாகரீகமானவர்கள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். திமுக எம்பி கனிமொழி அதிருப்தி!
தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டதாக கனிமொழி எம்.பி டெல்லியில் தெளிவுப்பட கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்தியில் உள்ள பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக இரு மொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு இரு மொழி கொள்கை தொடரும் என்பதில் உறுதியாக உள்ளது. திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன.
அதே சமயம் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், தனியார் பள்ளிகள் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டும் பாஜக அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் எதற்காக 3வது மொழி மறுக்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி வருகிறது. மேலும் மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
தமிழகம் தவறாக பரப்புரை: இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு இன்று மார்ச் 10 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாகவும், புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டி பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை செய்து வருகிறது. தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையும் திமுக அரசு பாழ்படுத்துகிறது" என, அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்தை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்ப தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
உரிமை மீறல் நோட்டீஸ்:இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என கூறியது வருத்தம் அளிக்கிறது. அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டு என்னை விளக்கம் அளிக்க அனுமதிக்கவில்லை.
இது, நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும். மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்களும் ஒருபோதும் கூறியது இல்லை. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.
ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என பிரதமர், கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்திவிட்டார். ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்"என்று கூறினார்.
வன்மையான கண்டனம்: இதனிடையே இதே விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, 'தமிழர்கள் தங்கள் கல்வி நிதியை கோருவதால் அவர்களை "ஜனநாயக விரோதிகள் மற்றும் நாகரிகமற்றவர்கள்' என்று அழைத்த மத்திய கல்வி அமைச்சரின் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தி மொழியை பின்வாசல் வழியாகத் திணிக்க முயற்சிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை தமிழ்நாடு நிராகரிப்பதால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது"என, சசிகாந்த் செந்தில் எம்.பி சற்று கடுமையாக சாடியுள்ளார்.