சிம்புவின் 50வது படத்தின் இயக்குநர் யார்...? அடுத்தடுத்த படங்களின் அதிரடி அப்டேட்
.
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதியன்று அவரது அடுத்தடுத்த மூன்று படங்களின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது. பிப்ரவரி 3ஆம் தேதி சிலம்பரசன் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக 2023ஆம் ஆண்டு ’பத்து தல’ திரைப்படம் வெளியானது. அதன்பின் இரண்டு வருடங்களாக எந்த படமும் வெளியாகவில்லை. இடையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால் அந்த பட வேலைகளும் பின்பு கைவிடப்பட்டது.
சிலம்பரசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஜுன் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. அதற்கடுத்ததாக ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன் படப்பிடிப்பு, படத்தின் பெயர் என எந்த தகவலும் இப்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தில் சிலம்பரசன் ”ஏன்டி என்ன விட்டுப் போன” எனும் பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் இன்று (ஜன.28) மாலை வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படமும் விரைவில் தொடங்கும் என எக்ஸ் பக்கத்தில் இருவரும் புத்தாண்டையொட்டி பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பார்க்கிங்’ திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் சிலம்பரசன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள்? எப்போது படப்பிடிப்பு தொடங்கும்? சிலம்பரசனின் 50வது படமாக இந்த படம் இருக்குமா? என பல்வேறு இதனைச் சுற்றி எழுந்துள்ளது. இதற்கான சிலம்பரசனின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி தெரிய வரும். நேற்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் அப்டேட், அப்டேட், அப்டேட் என மூன்று முறை பதிவிட்டிருந்தார் நடிகர் சிலம்பரசன்.
அதனையடுத்து நேற்று மாலையே சிலம்பரசனின் நெக்ஸ்ட் 3 ஆன் பிப்ரவரி 3 என டிசைன் செய்யப்பட்ட போஸ்டரை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அஷ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகிய இயக்குநர்களின் அவர் நடிக்கும் அடுத்த மூன்று படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிலம்பரசன் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படமானது மிகப்பெரும் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.