இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம்
,
இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறைந்த பிறகு அவரது உடலை பேணிப்பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்தவாரம் விடுத்திருக்கிறார்.
மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவின் மரபை எதிர்காலச் சந்ததிகள் கௌரவிப்பதற்காக அவரது உடலைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்றும் அத்தகைய ஒரு மதிப்புமிகு அங்கீகாரத்துக்கு அவர் உரித்துடையவர் என்றும் செய்தியாளர்கள் மகாநாட்டில் அஜித் ராஜபக்ச கூறினார்.
” முன்னாள் சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின் ஆகியோர் அவர்களின் நாடுகளின் வரலாற்று நாயகர்கள் என்பதால் உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த நாடுகள் அவற்றின் தலைவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்கின்றன. அதேபோன்ற மரியாதையை இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கவேண்டும்.
ஒரு மகத்தான தலைவர் என்ற வகையில் அவரின் முதன்மைநிலையை மலினப்படுத்தும் முயற்சிகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடுகின்றது. முன்னாள் ஜனாதிபதி தேசத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அவருக்குரிய பாதுகாப்பையும் மதிப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
வெளியான செய்திகளின்படி முன்னாள் பிரதி சபாநாயகர் லெனினையும் ஹோ சி மினையும் மாத்திரமே உதாரணமாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், வேறு சில நாடுகளின் தலைவர்களின் உடல்களும் அவர்களின் மரணத்துக்கு பிறகு நினைவாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1924 ஆம் ஆண்டு மரணமடைந்த லெனினின் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நினைவாலயத்தில் 1930 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மகத்தான தேசபக்தப் போர் என்று வர்ணித்த இரண்டாவது உலகப்போரின்போது மாஸ்கோவை ஜேர்மன் படைகள் கைப்பற்றக்கூடும் என்று தோன்றியபோது 1941 ஆம் ஆண்டில் லெனினின் உடல் நினைவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்புக்காக சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. போரின் முடிவுக்கு பிறகு அவரது உடல் மீண்டும் மாஸ்கோவுக்கு கொண்டு வரப்பட்டது.
சோவியத் யூனியனின் இரண்டாவது தலைவர் ஜோசப் ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்த பிறகு பதப்படுத்தப்பட்ட அவரது உடலும் மாஸ்கோ நினைவாலயத்தில் லெனினின் உடலுக்கு அருகாக வைக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு பிறகு பதவிக்கு வந்த நிகிட்டா குருஷேவ் ஸடாலினின் கொள்கைகளை நிராகரித்து முன்னெடுத்த இயக்கத்தின்போது 1961 ஆம் ஆண்டில் அவரின் உடல் நினைவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு செஞ்சதுக்கத்தில் கிரெம்ளினுக்கு அருகாக இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டது.
1976 செப்டெம்பரில் மரணமடைந்த சீனத்தலைவர் மாவோ சேதுங்கின் உடல் பெய்ஜிங்கின் தியனென்மென் சதுக்கத்தின் மத்தியில் அமைந்திருக்கும் நினைவு மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று மாவோ விரும்பிய போதிலும், அவரது விருப்பம் அலட்சியம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சோவியத் யூனியனில் ஸ்டாலினின் சடலத்தை நினைவாலயத்தில் இருந்து அகற்றி புதைத்ததன் மூலமாக அவரையும் கொள்கைகளையும் குருஷேவ் ஆட்சி நிராகரித்ததைப் போன்று தனக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மாவோ தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கக்கூடும். ஆனால், இன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை என்றாலும், அவரது உடல் தொடர்ந்தும் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1969 ஆம் ஆண்டில் மரணமடைந்த வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின்னின் உடல் 1975 ஆம் ஆண்டு முதல் தலைநகர் ஹனோயில் உள்ள நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்றே 1994 ஆம் ஆண்டில் காலமான வடகொரியாவின் தாபகத் தலைவர் கிம் இல் சுங்கின் உடலும் அவருக்கு பிறகு அதிகாரத்துக்கு வந்த அவரது மகன் கிம் ஜொங் இல்லின் உடலும் தலைநகர் யொங்யாங்கில் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தலைவர்களின் கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறை பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் சகலருமே கம்யூனிஸ்டுகள். பெரும் தியாகங்களுக்கு மத்தியில் தங்களது நாடுகளில் வெற்றிகரமான கம்யூனிஸ்ட் புரட்சிகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள். அவர்களை உதாரணம் காட்டி இலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கும் அத்தகைய கௌரவம் அளிக்கப்படவேண்டும் என்பது முன்னாள் பிரதி சபாநாயகரின் பெருவிருப்பமாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மீதான விசுவாச மிகுதியில் அந்த தலைவர்களின் ‘ விக்கிரக ‘ வரிசையில் தனது தலைவரையும் வைத்துப்பார்க்க அவர் விரும்புகிறார் போலும்.
முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சிறப்புச் சலுகைகளையும் வசதிகளையும் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகிந்த ராஜபக்சவின் தற்போதைய கொழும்பு வாசஸ்தலம் மற்றும் பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையே அஜித் ராஜபக்சவின் வேண்டுகோளுக்கான உடனடிக்காரணம் என்று தெரிகிறது.
மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமான அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காகவே அவரையும் அவரது ஆட்சியையும் புகழ்ந்து பேசக்கூடியதாக இருக்கிறது. அந்த போர் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. மகிந்தவும் கூட தனது கட்சியின் அரசியல் மீட்சிக்கு போர்வெற்றி மீண்டும் கைகொடுக்கும் என்று நம்புகிறார். அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவும் கூட ஜனாதிபதி தேர்தலில் போருக்கு அரசியல் தலைமைத்துவம் வழக்கிய தந்தையாரின் சாதனையையே மக்கள் மத்தியில் கூறி வாக்குக் கேட்டார்.
போர்வெற்றியை பயன்படுத்தி பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்து தங்களது அதிகாரத்தை பல வருடங்களாக வலுப்படுத்திய ராஜபக்சாக்கள் மீண்டும் அதே தந்திரோபாயத்தின் மூலமாக அரசியலில் மீட்சிபெறலாம் என்று இன்னமும் கூட நம்புகிறார்கள் போன்று தெரிகிறது. இனவாதத்தை தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை.
போர்வெற்றி காரணமாக குறப்பாக மகிந்த ராஜபக்சவும் பொதுவில் அவரது குடும்பத்தவர்களும் சிங்கள மக்கள் மத்தியில் அமோக ஆதரவைக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால், போர் வெற்றியை பயன்படுத்தி சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பி முன்னென்றும் இல்லாத வகையிலான ஊழல் ஆட்சியை நடத்திய அவர்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்துபவர்களாக ராஜபக்சாக்கள் விளங்குகிறார்கள்.
இலங்கை அரசியல் கடந்த காலத்திலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், மகிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதை போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை. ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தது போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக ஒருபோதும் கிளர்ச்சிகள் மூண்டதில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் மாத்திரமே அந்த எதேச்சாதிகாரம் உச்சநிலைக்குப் போனது. மட்டுமீறிய அதிகாரங்களை தங்களிடம் குவித்து வைத்திருப்பது ஏதோ தங்களது பிறப்புரிமை என்ற நினைப்பில் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
தங்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ராஜபக்சக்கள் உள்நாட்டு, வெளிநாட்டுச் சதி என்று கூறுவது வழக்கம். நாட்டு மக்கள் தங்களுக்கு கடைமைப்பட்டவர்கள் என்ற விசித்திரமான உணர்வை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற எண்ணமும் ராஜபக்சாக்களிடம் இருந்தது. தங்களது தவறுகளை சிங்கள மக்கள் பொருட்படு்த்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அவர்ளிடம் இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் அவர்களின் கீழ் பணியாற்றிய உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
முன்னாள் பிரதி சபாநாயகரைப் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் அரசியலில் தலையெடுக்க வேண்டுமானால், மக்கள் மத்தியில் ராஜபக்சாக்களின் செல்வாக்கு அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையிலும் கூட தனது மூத்த மகனின் எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை தனது காலத்தில் உறுதி செய்யவேண்டிய அவசரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினை அதுவல்ல.
மகிந்த ராஜபக்ச உரிமை கோருகின்ற போர் வெற்றியை அடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வரலாறு அவருக்கு கொடுத்தது. போர் முடிவுக்கு வந்த உடனடியாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும்பான்மையின மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவருக்கு சகல வாய்ப்புக்களும் இருந்தன. குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையாவது சாத்தியமான அளவுக்கு நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ச முன்வந்திருந்தால் எதிர்ப்பு கிளம்பியிருக்காது.
ஆனால், அவர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக மேலும் பகைமையை வளர்க்கக்கூடிய அணுகுமுறைையையே கடைப்பிடித்தார். பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு புதிய எதிரிகளை அவர் கண்டுபிடித்தார்.
எதிர்காலச் சந்ததிகளுக்கு இனப்பிரச்சினையை விட்டுச் செல்லாமல் இருப்பதற்கு தனக்கு இருந்த வாய்ப்புக்களை மகிந்த ராஜபக்ச தீர்க்கதரிசனத்துடன் உகந்த முறையில் பயன்படுத்தியிருந்தால் உண்மையிலேயே அந்த சந்ததிகளின் கௌரவத்துக்கு உரியவராக அவரைக் கொண்டாட முடியும். போர்வெற்றிக்காக மாத்திரம் அவரை எதிர்காலச் சந்ததிகள் கௌரவிக்க வேண்டும் என்று கூறுவது அடிப்படையில் இனவாதத்தை மேலும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கோரிக்கையேயாகும்.
அரசியலில் இருந்து தற்போதைக்கு விலகப் போவதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச தனது மரணத்துக்கு பிறகு உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று அஜித் ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை எவ்வாறு நோக்குகிறாரோ தெரியவில்லை.
மகிந்தவின் விசுவாசிகள் போர் வெற்றிக்காக அவர் வரலாற்றில் நினைவு கூரப்படவேண்டியவர் என்று கொண்டாடலாம். மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் தேசியவாத சக்திகளின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கக்கூடும். ஆனால் அவர் தவறான ஆட்சிமுறையின் ஒரு சின்னமாகவே நினைவு கூரப்படுவார் என்பதே உண்மை.