தமிழ் தினப் போட்டியில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் நீக்கப்பட்டமை குறித்து கவலை
உலக வேகத்தில் கூத்துக்கள் தொடர்பான அவதானம் குறைந்து வருகின்றது.

அகில இலங்கை ரீதியில் வருடாந்தம் இடம்பெறும் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் இருந்து ஆரம்ப கல்வி வகுப்புகளுக்கான போட்டி நிகழ்வுகளை தவிர்த்தமை தொடர்பில் அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அகில இலங்கை தமிழ் மொழித்தின சுற்று நிருபத்தில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் போட்டி நிகழ்வுகள் இணைத்துக்கொள்ளப்படல் வேண்டும்.
அத்துடன் சமூக நாடகப் போட்டி இணைக்கப்படல் வேண்டியதுடன் மாகாண மட்டத்தில் கூத்து நிகழ்வுகளும் உள்வாங்கப்படல் வேண்டும்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கிடையே அகில இலங்கை ரீதியிலான தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்வில் முதலாம் பிரிவிற்குள் தரம் 04, 05 வகுப்புகள் அடங்குகின்றன.
இப்பிரிவில் எழுத்தாக்கம், பேச்சி, வாசிப்பு, கதைக்கூறல், பாவோதல், இசையும் அசைவும் ஆகிய போட்டிகள் இடம்பெற்று வந்த நிலையில், இவ்வருடம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் முதலாம் பிரிவு போட்டி நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
ஆரம்ப பிரிவு பாடத்திட்டத்தில் இணைப்பாடவிதான செயற்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இப்போட்டி நிகழ்வுகள் தமிழ் பேசும் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு பெரிதும் துணை நிற்கும் செயற்பாடாக அமைகிறது.
சுவாமி விபுலானந்தரின் அறிவியல் தமிழ்ப் பணியை நினைவு கூறும் வகையிலும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரையில் தாய்மொழி உணர்வை ஏற்படுத்தும் பணியை தமிழ் மொழித்தின அனுஸ்டிப்புக்கள் ஏற்படுத்துகின்றன.
பாடசாலைகளில் முதலாம், இரண்டாம் தவணை நடவடிக்கைகளை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவதில் இப்போட்டி நிகழ்வு பெரும் பங்கை வகிக்கின்றன.
வகுப்பறை மட்டம் தொடக்கம், பாடசாலை மட்டம், உப வலய மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் என்ற வகையில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பக் கல்வியை கற்கும் மாணவர்களிடத்தே மிகுந்த வரவேற்பை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களிடத்தேயும் பேராதரவையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் கொண்டதாகவே இந் நிகழ்வுகள் அமைந்துள்ளன.
முன்வைக்கும் திறன், பாடும் திறன், வாசிக்கும் திறன், கதை கூறும் திறன், அபிநயிக்கும் திறன், எழுத்தாளுமையை விருத்தி செய்து கொள்ளும் திறன் ஆகியன மாணவர்களிடத்தே வளர்வதற்கான களமாக அமைகிறது.
அவ்வாறே ஆசிரியர்களின் வான்மை விருத்திக்கும் அவர்களது நிர்மான திறமைக்கும் களமாக அமைகிறது. சிறுவர் இலக்கியம், சிறுவர்களிடத்தே புத்தாக்கத்திறன் விருத்தி தொடர்பான முக்கியத்துவம் உணரப்படுகின்ற தருவாயில் இப்போட்டி நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளமை வேதனையளிக்கிறது.
இதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அவ் விடயம் தொடர்பிலான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
எனவே காலம் கடத்தாது இவ்வருட தமிழ் மொழித்தின சுற்று நிருபத்தில் திருத்தம் ஒன்றினை மேற்கொண்டு பிரிவு ஒன்றிற்கான போட்டி நிகழ்வுகளையும் இணைக்குமாறு வேண்டுகிறோம்.
அத்தோடு பாலர் பிரிவு என்ற வகையில் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்பு மாணவர்களுக்காகவும் போட்டி நிகழ்வுகளை உள்வாங்குவது பற்றி சிந்திப்பதும் பொருத்தமாக அமையும் எமது தயவான வேண்டுகோளாகும்.
ஜனாதிபதி, பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய, பிரதிக் கல்வி அமைச்சர் மதுர செனவிரட்ன, மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக தமிழ்த்துறையினர், மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண தமிழ் மொழிப் பிரிவு, வலயக் கல்விக் காரியாலயங்கள், வலயக் கல்விக் காரியாலய தமிழ் மொழிப் பிரிவினர், மற்றும் கல்வி சார் தொழிற்சங்கங்கள், பாடசாலை அதிபர்கள், கல்வி அமைச்சின், தேசிய கல்வி நிறுவகத்தின் இணைப்பாடவிதான செயற்பாட்டு பிரிவினர், திட்ட முன்மொழிவாளர்கள், பல்கலைக்கழகங்கள், தமிழ் ஆர்வலர்கள், மற்றும் அமைப்பினர்கள், ஆசிரிய கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுசன ஊடகங்கள் இவ் விடயம் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டுமாறும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
மேலும் கடந்த பல வருடங்களாக தமிழ் மொழித்தினப் போட்டி நிகழ்வில் இருந்து சமூக நாடகப் போட்டி நிகழ்வு உள்வாங்கப்படாமை இத்துறையின் வளர்ச்சி நிலையில் பெரிதும் பாதிப்பு நிலையை ஏற்படுத்துகிறது.
இலங்கையின் கல்வித்துறையில் அரங்கியல் என்ற எண்ணக்கரு வளர்ச்சிப்பெற்று வந்துள்ளதுடன் பல்கலைக்கழக மட்டங்களிலும் அதீத கவனத்தை வென்று வருகின்றமை கவனத்திற்குறியது.
சமூக நாடகம் தமிழ் மொழித்தினப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அத் துறையோடு தொடர்புபட்ட கலைகளின் வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைந்தமை சிறப்பம்சமாகும்.
இவ்வாறான களத்தில் வளர்ந்த பல கலைஞர்கள் இத் துறையில் விற்பன்னர்களாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இத் துறையில் பல ஆளுமைகள் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
இத்துறையில் ஆர்வமுள்ள, இத்துறையை கற்ற ஆசிரியர்களின் ஆளுமை விருத்திக்கான களமாகவும் அமையப்பெறும். இவ் விடயத்தை கவனத்தில் கொண்டு சமூக நாடக போட்டிணையும் தமிழ் மொழித் தின போட்டி நிகழ்வில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.
அவ்வாறே அரங்கியல் துறை பரிமானத்தில் கூத்துக்கள் தொடர்பான அவதானமும் கவனத்தை பெற்றதாக விளங்குகிறது.
உலக வேகத்தில் கூத்துக்கள் தொடர்பான அவதானம் குறைந்து வருகின்ற நிலையில் பிராந்திய மட்டத்தில் இக் கூத்துக்கள் தொடர்பான போட்டி நிகழ்வுகளையும் இணைப்பது சாலப் பொருத்தமாகும்.
விழுமிங்களை வலியுறுத்துகின்ற பணியில் கூத்துக்கள் தொடர்பான அவதானத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இலகுபடுத்துவதாகவும் இச் செயற்பாடு அமையப்பெறும்.
இவ் விடயத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள், கல்வியியலாளர்களும் தங்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டியதும் அவசியமானதாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.