பெங்களூரு அணி வரவேற்பு விழாவில் துயரம் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு! காயமடைந்த 47 பேரின் நிலை என்ன?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணிக்கு நடைபெற்ற வரவேற்பு மற்றும் வெற்றி விழாவின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு அணி நடப்பு ஆண்டின் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது. 18 ஆண்டு கால கனவு நனவான நிலையில் ஆர்சிபி அணியினர் இன்று பெங்களூரு திரும்பினர். அவர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரு அணி வீரர்களை வரவேற்க சின்னசாமி மைதானத்தில் சுமார் 2 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் மதியம் முதலே அங்கு திரண்டனர்.
அப்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் சின்னசாமி மைதானத்தின் நுழைவு வாயில்களில் நுழைய முயன்றதால் கடுமையான கூட்ட நெரிசல் நேரிட்டது. இதில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். எனினும் மயங்கி விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்துவிட்டு பலர் உள்ளே சென்றனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஒரு பெண் உட்பட 11 பேர் உயிரிழந்ததாக, பெங்களூரு நகர காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த துயர சம்பவத்தில் படுகாயம் அடைந்த 47 பேர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களின் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நெரிசலைத் தொடர்ந்து போலீசார் லேசான தடியடியும் நடத்தினர்.
சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
"படுகாயம் அடைந்தவர்களில் 16 பேர் தங்களது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 4 பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கு சிறிய காயங்கள்தான் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." என்று வைதேசி மருத்துவமனையின் மருத்துவர் எம்.எஸ்.ஹுமிரா கூறினார்.
பிரதமர் மோடி இரங்கல்: பெங்களூருவில் நிகழ்ந்துள்ள விபத்து நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு: இந்த சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், இச்சம்பவத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத துயரம்: விரும்பதகாத சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே, ஆர்சிபி அணியின் ரோடு ஷோவுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் சற்றும் எதிர்பாராத இந்த துயரச் சம்பவம் சின்னசாமி மைதானத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
கோலி உருக்கம்: ஒருபுறம் சின்னசாமி மைதானத்துக்கு வெளியே துன்பியல் சம்பவம் நிகழ்ந்த அதே வேளையில், மறுபுறம் மைதானத்திற்குள் ஆர்சிபி அணியிருக்கான பாராட்டு விழா எளிதாக நடத்தி முடிக்கப்பட்டது.
விழாவில் பேசிய விராட் கோலி, "இந்த வெற்றி எல்லாம் உங்களுக்காகதான். இந்த பெங்களூரு மாநகரின் மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்சிபி அணிக்கு தங்களது அபரிமிதமான ஆதரவை அளித்துள்ளனர். ஆர்சிபி ரசிகர்களை போன்று உலகில் வேறெங்கும், எந்த அணிக்கும் இப்படியொரு ரசிகர்கள் பட்டாளத்தை நான் கண்டதில்லை" என்று அவர் உருக்கமாக பேசினார்.