என்றோ ஒரு நாள் நமது மாவீரர்கள் கண்ட கனவு நனஙாகும் என்பதனை உறுதியாக நம்புவோம்! - மாவீரர் நாள் - 2025.
இறைமையை மீட்டெடுத்து எங்களுடைய அரசியல் தலைவிதியை நாமே தீர்மானிக்கின்ற ஒரு சூழலை உருவாக்கி, அந்த சூழலில் நாம் சுதந்திர மனிதர்களாக வாழ்வோம்!
நவம்பர் 27, 2025
என்றோ ஒரு நாள் நமது மாவீரர்கள் கண்ட கனவு நனஙாகும் என்பதனை உறுதியாக நம்புவோம்!.
இன்று மாவீரர் நாள்.
எங்கள் தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களின் நினைவு நாள்.
தமிழீழ விடுதலைக்காய் வித்தாய் வீழ்ந்த நமது மாவீரர்களை எமது மக்கள் தமது இதயக் கோவிலில் வைத்து வணங்கும் நாள்.
எமது மாவீரர்கள் விடுதலையை இலட்சியமாகக் கொண்டு களமாடி நின்றவர்கள். எதிரி காலடிகளை நமது மண்ணிலிருந்து அகற்றி, எமது மண் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க அயராது உழைத்தவர்கள்.
எமது மாவீரர்கள் தமது வாழ்வை ஈகம் செய்தமை எமது அடுத்த தலைமுறை நமது மண்ணில் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வுடன் தான். நான் என்பது முக்கியமல்ல நமது நாடே முக்கியம் என்ற உணர்வுடன் நமது மாவீரர்கள் களம் சென்றார்கள்.
ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய இனப்பிரச்சனையை உள்நாட்டு பிரச்சனையாக சுருக்கி விடுவதற்கு சிறீலங்கா அரசாங்கமும் அனைத்துலக அரசுகளும் முயற்சி எடுத்த வேளையில் நமது தேசியப் பிரச்சனை அனைத்துலகப் பிரச்சனையாக உருவெடுக்க காரணமாக நின்றவர்கள் நமது மாவீரர்கள்.
ஆண்ட தமிழினம் மீண்டும் ஆள வேண்டும் என்ற பழம் பெருமை பேசுவதற்காக நமது மாவீரர்கள் களமாடி நிற்கவில்லை. சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனஅழிப்பிலிருந்து ஈழத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனி அரசு ஒன்றே தீர்வாக அமைய முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் களத்தில் நின்றவர்கள் நமது மாவீரர்கள்.
தேசிய விடுதலையை நாம் அடைந்து கொண்டால் மட்டும் போதாது; சாதிய ஒடுக்குமுறை அகன்ற, மத ஒருமைப்பாடும் ஆண்- பெண் சமத்துவமும் நிலவும் சமூக நீதியும், சுற்றுச் சூழல் நீதியும் நிலவுகின்ற ஒரு சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்கின்ற ஒரு கனவுடன்தான் நமது மாவீரர்கள் களமாடி நின்றார்கள்.
தமது மண்ணையும் மக்களையும் பாதுகாத்து நின்றவர்கள் நமது மாவீரர்கள். தமது உயிரினை ஈகம் செய்யும் போது, இந்த மண்ணில் வித்தாய் வீழும் போது நமது எதிர்கால தலைமுறை சுதந்திரம் பெற்ற, விடுதலை அடைந்த ஒரு தலைமுறையாக வாழ வேண்டும் என்ற கனவுடன் தமது உயிரை ஈகம் செய்து நின்றவர்கள் நமது மாவீரர்கள்
எங்கள் மாவீரர்கள் சிந்திய குருதி நமது சிவந்த மண்ணை இன்னும் சிவப்பாக்கி இருக்கிறது. மாவீரர்களின் மூச்சுக்காற்று எமது காற்றுடன் கலந்து எமது மக்களின் மூச்சுடன் மூச்சாகக் கலந்திருக்கிறது.
நமது மண்ணெங்கும் நமது கடற்பரப்பெங்கும் நமது வான்வெளி எங்கும் நமது மாவீரர்களின் தடங்கள்கள் பரந்து கிடக்கின்றன. காலாதி காலமாக இந்த நினைவுகள் எமது மண்ணை எமது கடலை எமது வானை நிறைத்தே இருக்கும்
நமது மாவீரர்கள் சிந்திய குருதி இன்றும் நம் மண்ணைப் பாதுகாத்து நிற்கின்றது. தமிழீழ மக்களை, தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை அங்கீகரித்து தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழ் மக்களுடைய அடையாளத்தை அழித்து, அவர்களின் தேசிய தகமையைத் தகர்த்து இனக் கபளீகரம் செய்து விடலாம் என்று சிங்கள அரசு போடும் திட்டங்களை எல்லாம் முறியடிக்கும் ஆற்றலை மாவீரர்கள் சிந்திய குருதி எமது மக்களுக்கு வழங்கி இருக்கிறது
தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு பெரும் விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் வித்தாகி விழுந்த நவம்பர் 27 ஆம் நாள் உலகமெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் மாவீரர்களை மனமுருகி வணங்கி நிற்கிறார்கள்.
இன்றைய மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறது.
அன்பான மக்களே,
ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் அன்று மாவீரர்களுக்கான நமது வணக்கத்தை செலுத்தி நமது கடமைகளை நிறைவு செய்து விட்டோம் என்று நாங்கள் ஓய்ந்து இருந்து விட முடியாது. நாம் ஒவ்வொருவரும் எம் முன்னால் உள்ள பொறுப்புகளை உணர்ந்து, கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நமது தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது சாத்தியமாகும். ஒரு நாடு உருவாவது என்பது உள்நாட்டு சூழல்களால் மட்டும் நடந்து விடுவது அல்ல. ஒரு நாடு உருவாவது என்பது ஒரு புதிய அரசு அனைத்து உலக அரசுகளின் கூட்டமைப்புக்குள் இணைந்து கொள்ளும் ஒரு நடைமுறையை சார்ந்திருக்கும்.
ஏற்கனவே இருக்கின்ற அரச குழுமத்துக்குள் புதிய அங்கத்தவரை உள்வாங்கி விடுவதும் இலகுவானது அல்ல. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கின்ற அரசுகளுக்குள் தங்கள் எல்லைகளை வகுத்து தமது நலன்களை அடைந்து கொள்ளும் ஒரு சமன்பாட்டை அரசுகள் கொண்டிருந்தபோதும், காலத்தின் கட்டாயமாக பல புதிய புதிய அரசுகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த புதிய அரசுகளின் உருவாக்கத்தை உற்று அவதானித்தால், அவை அனைத்துலகச் சூழலுடன், புவிசார் அரசியலிலுடன், பூகோள அரசியலிலுடன் தொடர்பு பட்டவையாகத்தான் உள்ளன. புவிசார் அரசியலிலும், பூகோள அரசியலிலும் குறிப்பாக தென் ஆசிய அரசியலில் நாமும் பங்களார்களாக மாறுவது எமக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு உதவும்.
எந்த ஒரு தேசிய இனம் தான் உயிர் வாழ்வதற்கு, இன அழிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனி அரசு ஒன்று அமைவதை தவிர வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை என்று உணர்கிறதோ, அந்தத் தேசிய இனம் தனது போராட்டத்தை தொடர்ச்சியாகவும் வீச்சாகவும் வைத்திருத்தலும் அரச முன்நிபந்தனையாக இருக்கும்.
எனவே நாம் நமது மாவீரர்களுடைய கனவுகளை நமக்குள் உள்வாங்கி, அந்த கனவுகள் எமது மக்களின் எதிர்கால நன்மைக்கானவை என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும். எம்மில் பலருக்கு தமிழீழ அரசு அமைவது சாத்தியம் தானா என்ற கேள்வி இருப்பதினால் தான் அதனை முன்னிறுத்துச் செயற் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவதனை உணர முடிகிறது.
நாம் ஒரு தேசம்; எமக்கு பாரம்பரிய தாயகம் உண்டு,; தனியான பண்பாடு உண்டு; பொருளாதார வாழ்வு உண்டு; தொடர்ச்சியான பிரதேசத்தில் நாங்கள் காலாதி காலமாக வாழ்ந்து வருகிறோம். இத்தகைய ஒரு தேசிய இனம் காலனித்துவ காலத்தில் இழந்த இறைமையை, சிங்கள பௌத்த பேரினவாதம் இன்று தம் வசப்படுத்தி வைத்திருக்கிறது.
இந்த இறைமையை மீட்டெடுத்து எங்களுடைய அரசியல் தலைவிதியை நாமே தீர்மானிக்கின்ற ஒரு சூழலை உருவாக்கி, அந்த சூழலில் நாம் சுதந்திர மனிதர்களாக வாழ்வோம் என இந்த மாவீரர் நாளில் உறுதி கொள்வோமாக!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்திரகுமார்
பிரதமர்
தமிழீழ நாடுகடந்த அரசாங்கம்


