Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும் : அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமையும்,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது, "மக்கள் சிரட்டையிலா குடித்தார்கள்? ஏன் சிரட்டையை முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் அடையாளமாக்கவேண்டும் "

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் போதெல்லாம், எமது மக்கள் கடந்து வந்த பேரவலத்தின் சாட்சியங்களான கஞ்சியையும் சிரட்டையையும் கொச்சைப்படுத்தும் விதண்டாவாதங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. "மக்களொன்றும் சிரட்டையில் கஞ்சி குடிக்கவில்லை, ஏன் சிரட்டையை அடையாளப்படுத்த வேண்டும்?" என்ற கேள்விகளின் பின்னணியில் இருப்பது வரலாற்று அறியாமை மட்டுமல்ல; அது பேரழிவையும் மக்களின் வலியையும் மேட்டிமைத்தனமான (Elitist) பார்வையோடு அணுகும் அதிகார வர்க்கத்தின் ஒவ்வாமை ஆகும்.

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும் வெறும் பசியின் அடையாளங்கள் அல்ல; அவை எமது இனம் சந்தித்த உச்சக்கட்ட துயரத்தின், அழிவின் மற்றும் தப்பிப்பிழைத்தலின் ரத்த சாட்சியங்கள்.இனப் படுகொலைக்கான நீதிகோரல்!
 
1.  உலக வரலாற்றில் இனப்படுகொலைகளைச் சந்தித்த பல சமூகங்கள், தங்களின் பேரவலத்தை உணர்த்தும் எளிய, சாதாரணப் பொருட்களையே நினைவேந்தல் குறியீடுகளாகப் பயன்படுத்துகின்றன. யூதப் பேரழிவு (Holocaust): ஆஸ்விட்ஸ் வதைமுகாம் நினைவிடங்களில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பழைய காலணிகளும், மூக்குக்கண்ணாடிகளும், மொட்டையடிக்கப்பட்ட தலைமுடிகளும் வீரத்தின் அடையாளங்கள் அல்ல. அவை ஒடுக்குமுறையாளனின் கொடூரத்தையும், பாதிக்கப்பட்ட மக்களின் கையறுநிலையையும் உலகிற்கு உரைக்கும் சான்றுகள்.

உக்ரைன் செயற்கைப் பஞ்சம் (Holodomor):  உக்ரைன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பஞ்சத்தின் நினைவேந்தல் குறியீடு 'கோதுமைக் கதிர்கள்' (Five Stalks of Grain) ஆகும். பசியால் மடிந்த கோடிக்கணக்கான மக்களின் நினைவாக, இன்றும் உக்ரைனியர்கள் தானியக் கதிர்களையே துயரத்தின் அடையாளமாக ஏந்துகிறார்கள்.  ஆர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide): ஒட்டோமான் பேரரசால் ஆர்மேனிய மக்கள் பாலைவனங்களை நோக்கிக் கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டு, பட்டினியாலும் தாகத்தாலும் படுகொலை செய்யப்பட்டனர். 

ஆர்மேனிய நினைவேந்தலில், 'மறவாதே' (Forget-Me-Not) என்ற ஊதா நிற மலர் முதன்மைக் குறியீடாகும். இதனுடன், அவர்கள் பாலைவனப் பயணங்களின்போது தாகத்தைத் தீர்க்கப் பயன்படுத்திய எளிய மண் பாண்டங்களும், எஞ்சிய பழைய உடைமைகளும் வரலாற்றுச் சாட்சியங்களாகப் பேணப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களின் பசியையும் வறுமையையும் குறியீடாக்குவது அவர்களின் அறப்போராட்டத்தை சிறுமைப்படுத்தாது; மாறாக, எதிரியின் கொடூர முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தும் வலிமையான ஆயுதம்.

2. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது, "மக்கள் சிரட்டையிலா குடித்தார்கள்? ஏன் சிரட்டையை முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் அடையாளமாக்கவேண்டும் " என்று இன்று கேள்வி எழுப்புபவர்களின் ஆழமனதில், நீண்டகால யாழ்ப்பாண அதிகாரவர்க்க , உளவியல் ஒளிந்திருக்கிறது.   தமிழர் வாழ்வியலில், குறிப்பாக உழைக்கும் விளிம்புநிலை மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் சிரட்டைக்கு மிக முக்கிய பங்குண்டு. அகப்பையாகவும், நீராகாரம் அருந்தும் பாத்திரமாகவும் அது எளிய மக்களின் பிரிக்க முடியாத அடையாளமாகவே இருந்தது.

ஆனால், யாழ்ப்பாணச் சமூக  கட்டமைப்பிலும் வர்க்கப் பார்வையிலும் அது காலம் காலமாக 'இழிசனர் பாத்திரமாகவே' (கீழ்நிலைப் பொருளாக) பார்க்கப்பட்டது. மேல்தட்டு வர்க்கத்தினர் எளிய மக்களைத் தள்ளிவைக்கப் பயன்படுத்திய மனநிலையின் குறியீடு அது. முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் அந்த வர்க்க ஏற்றத்தாழ்வுகளை, போலிப் பெருமைகளை முற்றிலும் உடைத்தெறிந்தது. குண்டுமழைகளுக்கிடையே, கைகளில் கிடைத்த   சிரட்டை உட்படட பாத்திரங்களில்  கஞ்சியேந்தி பசியாறியபோது அங்கு மேல்தட்டு, கீழ்த்தட்டு என்ற பேதங்கள் மரணத்தின் முன் மண்டியிட்டன. 

அதிகார வர்க்கத்தால் பல காலம் ஒதுக்கப்பட்டு இழிவாகக் கருதப்பட்ட ஒரு பொருள், இன்று ஒட்டுமொத்த தமிழினத்தின் நினைவேந்தல் குறியீடாக — அடையாளப் பொருளாக — மாற்றப்படுவதை இத்தகைய மேட்டிமை மனம் கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே, "சிரட்டையில் கஞ்சி குடிப்பது அவமானம்; நாங்கள்  பரதேசிகள் என்று உலகுக்கு காட்டப்போகிறோமா " என்ற இத்தகைய கூச்சல்கள். சிரட்டையின் மீதான இவர்களின் கோபம் உண்மையில் அந்தப் பொருளின் மீதானது அல்ல; எளிய மக்களின் வலியும் வரலாறும் பொது அடையாளமாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத வர்க்கக் குரோதமே ஆகும்.

அலுமினிய பாத்திரங்களோ, நெகிழி பாத்திரங்களோ ,நெகிழி குவளைகளோ எமது அடையாளமல்ல . ஆனால் சிரட்டை எனது பாட்டனும்,பூட்டனும்  அவர்களுக்கு முந்திய பரம்பரையும் கஞ்சியும் கூழும் குடித்த எமக்கேயான பண்பாட்டு  வழி வந்த பாத்திரம் . இதை எமக்கான பொது குறியீடாக  வைத்தது மிகப்பொருத்தமே. முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது பிச்சையல்ல; அது பங்கிட்டு உண்ட நம் மக்களின் கூட்டுறவு. முள்ளிவாய்க்கால் மண்ணில் சக மனிதனை வாழவைக்க தம் உயிரைப் பணயம் வைத்து, எரியும் ஷெல் துண்டுகளுக்கு நடுவே கஞ்சி காய்ச்சிய ஈகத்தின் வரலாறு அது. சிரட்டை என்பது தோல்வியின் அவமானத்தின் அடையாளமல்ல; அது உலக வல்லரசுகள் எல்லாம் ஓரணி திரண்டு அடித்தபோதும், ஒரு மிடறு கஞ்சியோடு தன் உயிரைக் காத்துத் தப்பிப்பிழைக்கப் போராடிய ஓர் இனத்தின் வாழ்வியல் குறியீடு.

வரலாற்றை வீரத்தின் பக்கத்தில் இருந்து மட்டும் எழுதிவிட முடியாது; அது சிந்திய ரத்தத்திலிருந்தும், வடிந்த கண்ணீரிலிருந்தும், எரிந்த பசியிலிருந்தும் எழுதப்பட வேண்டும். மாவீரர்களின் ஆயுதங்கள் எப்படி எமது வீரத்தின் குறியீடோ, அதேபோல முள்ளிவாய்க்கால் சிரட்டையும் கஞ்சியும் எமது மக்களின் கூட்டுத்துயரத்தின், அழியாத நெருப்பின் குறியீடுகள்.
வலியை உணராதவர்களால், வடுக்களைப் போற்றாதவர்களால் ஒருபோதும் விடுதலையை வென்றெடுக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடுகள் பொது அடையாளமாக மாறுவதே உண்மையான சமூக விடுதலையின் திறவுகோல். விதண்டாவாதங்கள் வரலாற்றை மறைக்காது; முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையும் எமது இனப்படுகொலையின் நீதிக்கான எரியும் சாட்சியங்களாக என்றென்றும் நிலைத்திருக்கும்.

- சிவா சின்னப்பொடி