'சிவகார்த்திகேயன் என்னை அழைக்க மாட்டார்' - உடைத்து பேசிய சூரி!
எனது அடுத்த படம் ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருக்கும்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற காட்சிக்கு பிறகு நடிகர் சூரி "பரோட்டா சூரி" என்று பிரபலமானார். நிறைய முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வந்த சூரி கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சூரியின் புதிய திரைப்படம் "மாமன்" தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள "மாமன்" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார் சூரி.
அதன் ஒரு பகுதியாக நேற்று (மே 20) திருச்சி காவேரி திரையரங்கத்தில் ரசிகர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மாமன்" திரைப்படம் வெளியாவதற்கு முன்பே குடும்பத்தில் நடந்ததை நினைவுபடுத்தும் திரைப்படமாக இருக்கும் என கூறியிருந்தோம். என்ன கூறினோமோ அது தான் தற்பொழுது நடக்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக நேரடியாக திரையரங்கிற்கு வந்துள்ளோம்'' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாமன்" படத்தில் முதல் பாதியில் அதிகமான நகைச்சுவை காட்சியும், இரண்டாம் பாதியில் அதிக உணர்ச்சிபூர்வமான காட்சிகளும் உள்ளன. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது "மாமன்" படத்தினுடைய வெற்றியாக உள்ளது.
எனது அடுத்த படம் ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருக்கும். நடிகர் சிவகார்த்திகேயனோடு மீண்டும் காமெடி படத்தில் இணைந்து நடிக்க சொன்னால் அவரே என்னை அழைக்க மாட்டார். அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம். நகைச்சுவை நடிகராக நடிப்பதை விட கதாநாயகனாக இருக்கும் பொழுது கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன்'' என சூரி தெரிவித்தார்.
அதன் பின்னர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த சூரி, '' என்னுடைய அன்பு தம்பிகளே சினிமாவை கொண்டாடுங்கள் ஆனால் முதலில் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்'' என அறிவுறுத்திவிட்டு சென்றார்.