பிரான்சில் "வெளிநாட்டவர்கள் வாக்களிக்கலாமா? தூசி தட்டப்பட்ட பழைய கோப்பு!
பிரான்சில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் (Ressortissants de l’UE) உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம்.
பிரான்சில் "வெளிநாட்டவர்கள் வாக்களிக்கலாமா?" - தேசிய நாடாளுமன்றத்தில் (Assemblée nationale) தூசி தட்டப்படும் பழைய கோப்பு!
நீண்ட காலமாக நாடாளுமன்றக் கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு சட்ட மசோதா, திடீரென இப்போதுதேசிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத வெளிநாட்டினரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை (Droit de vote) இது வலியுறுத்துகிறது.
தூசி தட்டப்பட்ட பழைய கோப்பு!
பசுமைக் கட்சியினரால் பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், ஒரு காலத்தில் Sénat (செனட் சபை) ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால், காலப்போக்கில் அது நடைமுறைக்கு வராமல் முடங்கிப்போனது.
தற்போது இடதுசாரி மற்றும் சூழலியல் கட்சிகள் (Ecologistes) இதை மீண்டும் கையில் எடுத்துள்ளன.
தற்போதைய நிலையில், பிரான்சில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் (Ressortissants de l’UE) உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால், இலங்கையர்கள் ,இந்தியர்கள், அமெரிக்கர்கள், அல்ஜீரியர்கள் போன்ற ஐரோப்பா அல்லாத நாட்டினருக்கு அந்த உரிமை இல்லை.
அவர்கள் நீண்ட காலம் இங்கே வசித்தாலும் வாக்களிக்க முடியாது. இந்த நிலையை மாற்றி, அவர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்குவதே இச்சட்டத்தின் நோக்கம்.
இந்தச் சட்டம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டாலும், வெளிநாட்டினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படாது. அவர்கள் நகர மன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம்.
ஆனால், அவர்களே Maire (மேயர்) அல்லது Adjoint (துணை மேயர்) பதவிகளுக்குப் போட்டியிட முடியாது. அதேபோல், Sénateurs (செனட் உறுப்பினர்களை) தேர்வு செய்யும் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது.
அடுத்ததாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இது நடைமுறைக்கு வருமா என்றால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஏனெனில்:
இது அரசியலமைப்புச் சட்டம் (Loi constitutionnelle) சார்ந்த மாற்றம் என்பதால், நாடாளுமன்றம் மட்டும் முடிவு செய்ய முடியாது; மக்களிடம் Référendum (பொது வாக்கெடுப்பு) நடத்தப்பட வேண்டும்.
வாக்காளர் பட்டியலைத் (Listes électorales) தயாரிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லை.
எனவே, இப்போதைக்கு இது ஒரு விவாதப் பொருளாக மட்டுமே மேலெழுந்துள்ளது.


