அநுரவின் சிம்மாசனத்துக்கு பினானால் ஒழிந்திருக்கும் சக்தி, ரில்வின் சில்வா!
இந்தியாவில் , வலிமைவாய்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் சிம்மாசனத்துக்கு பின்னால் ஒழிந்திருக்கும் மெய்யான அதிகாரம் என்று கூறப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக தலைமைத்துவப் பதவியை வகிக்காமல் ஆனால், அதேவேளை மெய்யாக முனைப்புடன் அதிகாரத்தைக் கொண்டிருப்போரை குறிப்பிடும்போது ” சிம்மாசனத்துக்கு பின்னால் இருக்கும் சக்தி ” என்ற சொற்தொடர் வழமையாக பயன்படுத்தப்படுகிறது.
அரசியல் அல்லது ஆட்சிமுறையின் பின்புலத்தில் நடைமுறையில் உத்தியோகபூர்வமாக தலைவராக இருப்பவருக்கு நிகராக செல்வாக்குடன் தீர்மானங்களை மேற்கொள்வதில் பெருமளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவரை வர்ணிப்பதற்கு இந்த சொற்தொடர் பொதுவில் பயன்படுத்தப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு தலைவர்கள் அதிகார பீடங்களுக்கு பின்னால் வெவ்வேறு அதிகாரங்களுடன் இருந்து வந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமராகவும் நடைமுறையில் ஆட்சியாளராகவும் இருக்கின்ற அதவேளை, வலிமைவாய்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் சிம்மாசனத்துக்கு பின்னால் ஒழிந்திருக்கும் மெய்யான அதிகாரம் என்று கூறப்படுகிறது.
அதேபோன்று இலங்கையில் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகவும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய தேசிய மக்கள் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார்.
ஆனால், அதேவேளை ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே தீர்மானங்களை எடுப்பவராக சிம்மாசனத்துக்கு பினானால் ஒழிந்திருக்கும் சக்தியாக விளங்குவதாக பரவலாக நம்பப்படுகிறது. ரில்வினே நாட்டை ஆட்சிசெய்யும் மெய்யான ஜனாதிபதி என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூறவும் செய்கிறார்கள்.
பத்தரமுல்லை பெலவத்தையில் பன்னிப்பிட்டிய வீதியில் 464/ 20 இலக்கத்தில் அமைந்திருக்கும் ஜே.வி.பி.யின் தலைமையகமே தேசிய மக்கள் சக்தி அரசாக்கத்தின் உண்மையான உத்தியோகபூர்வமற்ற அதிகார மையம் என்று குறிப்பிடப்படுகிறது.
பல்வேறு விவகாரங்களில் ரில்வின் சில்வா வெளிப்படுத்துகின்ற கருத்துக்களே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிரைப்பாட்டை பிரதிபலிப்பதாக தோன்றுகிறது என்று அண்மையில் பாராளுமன்றத்தில் கூறிய இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு உறுப்பினர் சாணக்கியன் இர்சமாணிக்கம் ரில்வின் சில்வா தான் உண்மையான ஜனாதிபதியா என்று நகைச்சுவையாக கேள்வியெழுப்பினார்.
அண்மையில் நான் ‘ சிம்மாசனத்துக்கு பின்னால் உள்ள சக்தி ; மார்க்கஸ் அக்றிப்பாவின் சேவை, மூலோபாயம் மற்றும் அதிகாரம்’ ( The Power Behind the Throne ; Marcus Agrippa’s Service, Strategy and Power) என்ற நூலின் விமர்சனம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. றோமன் வரலாற்றில் பெரிதும் கவனாக்கப்படாத ஒரு ஆளான மார்க்கஸ் அக்றிப்பாவைப் பற்றிய அந்த நூல் மார்க்கஸ் எல். கிரேயினால் எழுதப்பட்டது. விமர்சனத்தை எழுதியவர் பின்வருமாறு கூறுகிறார் ;
“மாச்க்கஸ் அக்றிப்பா ஒருபோதும் றோமை ஆட்சிசெய்யவில்லை. அவர் ஒருபோதும் முடிசூடி நிரந்தரமான சிம்மாசனத்துக்கு உரிமை கோரவில்லை.
எந்தவொரு விஞ்ஞாபனத்தையும் விட்டுச் செல்லவுமில்லை. இருந்தாலும், அவர் இல்லாமல் அகஸ்டஸ் சீசரின் சாம்ராச்சியம் ஒருபோதுமே நீடித்து நிலைத்திருக்க வாய்பிருந்திருக்காது…… அக்றிப்பாவின் தலைமைத்துவம் பகடானதாவோ, கவர்ச்சியானதாகவோ அல்லது சுயமேம்பாட்டில் ஆர்வம் கொண்டதாகவோ இருந்ததில்லை. ஆனால், அது ஒழுங்கு, கட்டுப்பாட்டுடனாதாக, நிதானமுடையதாக இடையறாது பயனுடையதாக இருந்தது.”
இந்த பந்தியை வாசித்தபோது அதில் உள்ள வரிகள் இலங்கையின் தற்போதைய பின்புலத்தில் ரில்வின் சில்வாவுக்கும் பிரயோகிக்கக்கூடியவை என்று எனது மனதிற்பட்டது. வழமையாக மென்மையாகப் பேசும் சுபாவமுடைய ரில்வின் சில்வா விளம்பரத்தை தவிர்ப்பவர். அவர் அரசாங்கத்தில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என்பதுடன் பாராளுமன்றத்திலோ அல்லது எந்தவொரு உள்ளூராட்சி சபையிலுமோ உறுப்பினராக இருக்கவுமில்லை.
அவர் கட்சியின் பொதுச் செயலாளர் மாத்திரமே. இருந்தாலும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அதிகார மையத்துக்கு சமாந்தரமான ஒருவராக அவரை சிலர் கருதுகிறார்கள். வெளிநாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் அவரை சந்திக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் கட்சியின் தூதுக்குழுக்களுக்கு அவர் தலைமை வகிக்கிறார். ரில்வின் சில்வா கடந்த வாரம் ஜே வி.பி.யின் தூதுக்குழுவொன்றுக்கு தலைமைதாங்கி இந்தியா சென்றிருந்தார்.
முன்னதாக அவர் தலைமையில் கட்சியின் தூதுக்குழுவொன்று சீனாவுக்கும் சென்று வந்தது. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணும் அணுகுமுறையைக் கடைப்பிடித்துவருகிறது.
ஜனாதிபதி திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு சென்றுவிட்டு அதற்கு பிறகே சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஜே.வி.பி. அதிகாரத்துக்கு வந்த பிறகு கட்சியின் எஜமான் ரில்வின் சில்வாவைப் பொறுத்தவரை, அவர் முதலில் சீன விஜயத்துக்கு பின்னரே இந்தியா சென்றார். திசாநாயக்கவும் ரில்வினும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான தங்களது விஜயங்களின் நிரல் ஒழுங்குகளில் இந்த சமநிலையைப் பேணுகிறார்கள்.
பெலவத்தையின் கட்டுப்பாடு
ரில்வின் சில்வாவை அடிக்கடி குத்தலாகப் பேசும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கம் பெலவத்தையினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறார் அல்லது பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்திருக்கும் ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இருந்து அரசாங்கம் வழிநடத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே அவ்வாறு கூறப்படுகிறது.
சகல தீர்மானங்களுமே கட்சியின் செயலாளரினால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தீர்மானங்களை ஒரு இறப்பர் முத்திரையைப் போன்று அங்கீகாரத்தை மாத்திரம் வழங்குகிறது என்பதுமே குற்றச்சாட்டாகும்.
இந்த குற்றச்சாட்டை ரில்வின் அடிக்கடி மறுதலித்திருக்கிறார். ஜே.வி.பி.யின் அரசியற்குழுவும் மத்தியகுழுவும் பெலவத்தை கட்சி தலைமையகத்தில் அடிக்கடி கூடி முக்கியமான பிரச்சினைகளை ஆராய்கின்றன என்பதே அவரது விளக்கமாக இருந்துவருகிறது.
அங்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவுடன் கூட்டுக் கூட்டங்களும் நடைபெறுகின்றன. ஜனாதிபதி திசாநாயக்கவும் பல்வேறு அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அரசியற்குழுவினதும் மத்திய குழுவினதும் உறுப்பினர்கள் என்ற வஙையில் இந்த கூட்டங்களில் பங்கேற்கிறார்கள்.
ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தீர்மானங்கள் தனியாக ஜனாதிபதி செயலகத்திலும் அமைச்சரவை செயலகத்திலும் எடுக்கப்படுகின்றன.
2026 பெப்ரவரி 22 சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான நேர்காணல் ஒன்றில் ரில்வின் சில்வாவிடம் ” ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நீங்கள் தான் சிம்மாசனத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான அதாகாரம் என்ற பொதுவான எண்ணம் நிலவுகிறதே என்று கேட்டகப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு ;
” முன்னதாக அரசாங்கம் தனிநபர்களினால் நடத்தப்பட்டது. ஒருவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்து விட்டார் என்றால், அவர் தன்னெண்ணத்தில் தனியாகவே செயற்பட்டார். மற்றையவர்கள் தலையாட்டிக்கொண்டு தலைவரைப் பின்பற்றுவார்கள். நாம் வித்தியாசமானவர்கள். நாம் ஜே.வி.பி.யை ஒரு அங்கமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தியை அமைத்தோம்.
நாம் எந்தவொரு புதிய தீர்மானங்களையும் எடுக்கிறோம் என்றால், தேசிய மக்கள் சக்தியாக எமக்குள் கலந்தாலோசித்து அந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.
இதற்கு மேலதிகமாக அமைச்சரவை அதன் சொந்தத்தில் தீர்மானங்களை எடுக்கிறது. கொள்கைத் தீர்மானங்களை நாம் எடுக்கும்போது தேசிய மக்கள் சக்தியே மக்களினால் தெரிவு செய்யப்பட்டது என்பதை மனதிற்கொண்டு கூட்டாகத் தீர்மானிக்கிறோம். ஒருவரே சகல தீர்மானங்களையும் எடுத்து பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை.
” உண்மையில்,’ அதிகாரம்’ என்ற சொல்லை நாம் விருப்புவதில்லை. எம்மெல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்ற நாம் பாடுபடுகிறோம்.
சிலர் நினைப்பது போன்று கண்ணுக்குத் தெரியாத எந்தவொரு சக்தியும் பின்னாலிருந்து இயக்கவில்லை. ஐக்கியம், கடைப்பிடித்தல் என்ற லிச்சவி கோட்பாடுகளை நாம் பின்பற்றுகிறோம். தேவை ஏற்படும்போது நாம் அடிக்கடி கூடி பிரச்சினைகளை ஆராய்ந்து ஒன்ற்கத் தீர்மானங்களை எடுக்கிறோம்.”

திசாநாயக்க — ரில்வின் பிளவு
உட்கட்சித் தீர்மானங்கள் மற்றும் திசாநாயக்க — ரில்வின் பிளவு பற்றி கதைகளைப் பரப்புவதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபடுகின்றன.
எந்தவொரு அமைப்பிலும் அல்லது அரசியல் கட்சியிலும் உள் வேறுபாடுகளும் பதற்றமும் நிலவுவது வாழ்வின் யதார்த்தம். ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அதன் தலைவர் ஜனதிபதி திசாநாயக்கவும் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் பெலவத்தையில் ஜே.வி.பி. யின் தலைமையகத்தின் வளாகத்திற்குள்ளேயே வசிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பிறகு ஒரு கட்டத்தில் திசாநாயக்க சிறிதுகாலம் அங்கிருந்து வெளியேறினார்.
அவருக்கு கடிதம் ஒன்றை எழுதிய ரில்வின் சில்வா கட்சித் தோழர்களும் தானும் திசாநாயக்க மீண்டும் தலைமையகத்திற்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புவதாக அறிவித்தார். அதனால் திசாநாயக்க அங்கு திரும்பிவந்தார்.
இப்போது வாரத்தில் சில நாட்கள் திசாநாயக்க கட்சி அலுவலகத்தில் தங்குகின்ற அதேவேளை, ரில்வின் பெரும்பாலான நேரங்களில் கட்சி அலுவலகத்தில் தங்கிக்கொண்டு வாரத்தில் ஒரு தடவை வீட்டுக்கு சென்றுவருவதாக கூறப்படுகிறது.
சிறையில் ஏழு வருடங்கள்
ஆறு உறுப்பினர்களுடனான அரசியற்குழுவையும் இருபத்தைந்து உறுப்பினர்களுடனான மத்திய குழுவையும் ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. இரு குழுக்களினதும் மிகவும் மூத்த உறுப்பினராக ரில்வின் இருக்கிறார். 1978 ஆம் ஆண்டில் ஜே.வி பி.யின் முழுமையான உறுப்பினராக வந்த ரில்வின் சுசில் என்ற இயக்கப் பெயரை உடையவர்.
1987 ஆம் ஆண்டில் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் அவர் களுத்துறை மாவட்டத்தின் ஜே.வி.பி. செயலாளராக இருந்தார். ஏழு வருடங்களை சிறையில் கழித்த ரில்வின் 1994 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட அவர் தொடச்ச்சியாக 31 வருடக்களாக அந்த பதவியில் இருந்து வருகிறார்.
ரில்வின் ஐயா / லொக்கு ஐயா
தடித்த மீசை, ஆட்டுத்தாடி யைக் கொண்ட — மூக்குக் கண்ணாடி அணிந்த ரில்வின் சில்வா அவரது மூப்பு மற்றும் அன்பாதரவாக பழகும் சுபாவம் காரணமாக ஜே.வி.பி. உறுப்பினர்களினால் பெரிதும் விருப்பப்படுபவராகவும் நேசாக்கப்படுபவராகவும் விளங்குகிறார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் மிகவும் மூத்த உறுப்பினர்கள் அவரை ரில்வின் ஐயா ( அண்ணன் ) என்றே அழைக்கிறார்கள். கட்சியின் மிகவும் இளம் உறுப்பினர்களுக்கு அவர் லொக்கு ஐயா.
70 வது பிறந்ததினம்
ரில்வின் தனது 70 வது பிறந்த தினத்தை பெப்ரவரி 26 ஆம் திகதி கொண்டாடுகிறார். இந்த பின்புலத்தில் இந்த பத்தி இவ்வாரம் அவர் மீது கவனத்தைக் குவிக்கிறது.ரில்வினை நான் ஒருபோதும் நேரடியாக சந்தித்ததில்லை என்றபோதிலும், அவரைப்பற்றி அறிந்தவர்கள் வழங்கிய தகவல்கள், அவர் வழங்கிய நேர்காணல்கள், அவரின் உரைகளை மற்றும் அவரைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாக வைத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்
முல்லப்பிட்டிய
களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தேர்தல் தொகுதியில் உள்ள முல்லப்பிட்டியில் 1956 பெப்ரவரி 26 ஆம் திகதி மெத்சிறி ரில்வின் சில்வா பிறந்தார். அவரின் தந்தையார் தச்சுத்தொழில் வினைஞர். குடும்பப் பெண்ணான அவரின் தாயார் குடும்ப வருமானத்துக்கு உதவ தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழிலைச் செய்து வந்தார். ஐந்து பிள்ளைகளில் ( நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும்) ரில்வின் மூத்தவர்.
ரில்வின் தனது ஆரம்பக் கல்வியை களவமோதர வித்தியாலயத்தில் பெற்றார். பிரபல்யமான மலைக்கோயிலான கந்தே விகாரையின் அடிவாரத்தில் அமைந்திருந்த அந்த பாடசாலை “கந்தே விகாரய பாசல ” என்றும் அழைக்கப்பட்டது. இரண்டாம் நிலைக் கல்வியை அவர் அளுத்கம மகா வித்தியாலயத்திலும் பேருவளை மங்கள பிரிவேனாவிலும் பெற்றார்.
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மூத்த மகனான ரில்வினால் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை வரை கல்வியைத் தொடர முடியவில்லை. பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்டு களுத்துறை மாவட்டத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வேலைக்குச் சேச்ந்தார். பிறகு அவருக்கு கண்டி ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்தது.
” விமலியாஸ் பாசுனே ” என்று அறியப்பட்ட ரில்வினின் தந்தையார் அவரது இளமைக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்.
1960 மார்ச் பொதுத் தேர்தலில் முதற்தடவையாக பேருவளை தொகுதி உருவாக்கப்பட்டபோது அவர் லங்கா சமசமாஜ கட்சியின் வேட்பாளரான டி. குணவர்தனவை ஆதரித்தார்.
குணவர்தன தோல்வி கண்டார். 1960 ஜூலை பொதுத் தேர்தல் வந்தபோது சமசமாஜ கட்சி சுதந்திர கட்சியுடன் போட்டித்தவிர்ப்பு உடன்பாடொன்றைச் செய்துகொண்டது. சுதந்திர கட்சியின் வேட்பாளரான ஐ.ஏ. காதர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பாக்கீர் மார்க்காரை தோற்கடித்தார்.
1964 ஆம் ஆண்டில் சமசமாஜ கட்சி சுதந்திர கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. 1965 தேர்தலில் ரில்வினின் தந்தையார். ஐ.ஏ. காதரை ஆதரித்தார்.
காதர் பாக்கீர் மார்க்காரிடம் தோல்வி கண்டார். 1970 தேர்தலில் சில்வா காதரை ஆதரித்தார். சுதந்திர கட்சி, சமசமாஜ கட்சி,. கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி அந்த தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றது.
ஆனால், ரில்வினின் தந்தையார் பேருவளை பாராளுமன்ற உறுப்பினர் காதருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறினார். பாக்கீர் மார்க்காரின் தீவிரமான ஆதரவாளராக மாறிய அவர் முல்லப்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சிக் கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இடதுசாரிப் போக்கு
தந்தையார் ஐக்கிய தேசிய கட்சியின் தீவிர ஆதரவாளராக மாறிய போதிலும் கூட, ரில்வின் இடதுசாராகள் பக்கம் சாயத்தொடங்கினார். அவை அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய நாட்கள். கம்யூனிஸ்ட் மற்றும் சோவியத் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக வண்ணமயமான பிரசுரங்கள் சிங்களத்தில் வெளியாகின. ரஷ்ய இலக்கியங்களும் சிங்களத்தில் கிடைத்தன. சோவியத் யூனியன் பால் பெரிதும் கவரப்பட்ட ரில்வின் இடதுசாரிப் போக்குடையவராக மாறினார்.
ஐ.தே.க. அரசின் தொழிலை நிராகரிப்பு
முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சிமீது கடுமையான வெறுப்பை வளர்த்துக்கொள்கிற அளவுக்கு இடதுசாரி கோட்பாடுகள் மீது ரில்வின் பற்றுக் கொண்டவராக மாறினார்.
1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சியின் முல்லப்பிட்டிய கிளையின் தலைவராக இருந்த ரில்வினின் தந்தையார் அன்றைய பேருவளை பாராளுமன்ற உறுப்பினரான பாக்கீர் மார்க்காரின் மூலமாக தனது மூத்த மகனுக்கு கிராம சேவகர் தொழில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
ஆனால், ரில்வின ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் இருந்து தொழில் ஒன்றைப் பெறுவதற்கு பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் தந்தையாரும் மூத்த மகனும் பல வருடங்களாக ஒருவருடன் ஒருவர் பேசாமல் பேசாமல் இருந்தனர்.
1971 ஏப்ரிலில் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சி இடம்பெற்றபோது ரில்வினுக்கு 15 வயது. அந்த நேரத்தில் களுத்துறை மாவட்டத்தில் ஜே.வி.பி. பலம்பொருந்தியதாக இருக்கவில்லை. அப்போது ரில்வின் ஜே. வி.பி.யின் செல்வாக்கிற்கு உள்ளாகவில்லை. ஆனால்,. கண்டி ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்ற பிறகு இடதுசாரிப் போக்குடைய ரில்வினின் ஜே.வி.பி. பற்றிய எண்ணம் மாறத் தொடங்கியது.
றோஹண விஜேவீர
1977 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட்டு சிறையில் இருந்த அதன் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விஜேவீரவின் தலைமைத்துவத்தின் கீழ். ஜே.வி.பி. மீள அணிதிரட்டத் தொடக்கியது.
கண்டி போஹம்பரை மைதானத்தில் நடத்தப்பட்ட ஜே.வி.பி.யின் கூட்டத்தில் விஜேவீரவின் பேச்சினால் கட்டுண்ட மக்கள் கூட்டத்தில் ஒருவராக ரில்வின் இருந்தார். விஜேவீரவினால் கவரப்பட்ட ரில்வின் அவருடன் சில நிமிடங்கள் பேசினார். தனது கட்சியின் இணைந்து கொள்ளுமாறு விஜேவீர ரில்வினை அழைத்தார்.
விஜேவீரவுடனான அந்த குறுகிய நேர சந்திப்பைத் தொடர்ந்து ஜே.வி.பி.யின் பிரபல்யமான ஐந்து விரிவுரைகளில் கலந்துகொண்ட ரில்வின் கட்சியினால் நடத்தப்பட்ட இரு வாரகால போதனை முகாமிலும் பங்கேற்றார். ஜே.வி.பி.யின் கொள்கைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட ரில்வின் 1978 ஆம் ஆண்டில் முறைப்படி கட்சியில் இணைந்து கொண்டார். அடுத்த வருடம் கட்சியின் முழுநேர ஊழியராக ரில்வின் தரமுயர்த்தப்பட்டார்.
சோமவன்ச அமரசிங்க
ரில்வின் களுத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாவட்டத்தில் கட்சி வேலை செய்வதற்கு அமர்த்தப்பட்டார். ஜே.வி.பி.யின் களுத்துறை மாவட்டச் செயலாளராகவும் பேருவளை தொகுதி அமைப்பாளராகவும் அந்த நேரத்தில் சோமவன்ச அமரசிங்க இருந்தார்.
அவரும் களுத்துறை மாவட்டத்தின் பயாகலையைச் சேர்ந்தவர். ரில்வின் மீது விருப்பம் கொண்ட சோமவன்ச அவரை தனது அணிக்குள் இணைத்துக்கொண்டார்.
ஜே.வி.பி.யின் களுத்துறை மாவட்ட இளைஞர் முன்னணியின் செயலாளராக நியமிக்கப்பட்ட ரில்வின் களுத்துறை மாவட்டக் குழுவின் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டார். சோமவன்சவின் தனிப்பட்ட உதவியாளராகவும் ரில்வின் பணியாற்றினார். ஜே.வி.பி.யில் தனது குருவும் வழிகாட்டியும் சோமவன்சவே என்று பல நேர்காணல்களில் ரில்வின் ஒத்துக் கொண்டார்.
களுத்துறை மாவட்டத்தில் ஜே.வி.பி.யை கட்டியெழுப்புவதற்கு தளராத ஊக்கத்துடன் ரில்வின் பாடுபட்டார். கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக அவர் மைல் கணக்காக நடந்து வீடூவீடாக இளைஞர்களைச் சந்தித்தார்.
1982 ஜனாதிபதி தேர்தலில் றோஹண விஜேவீர போட்டியிட்டார். அவருக்காக பிரசாரம் செய்வதற்காக சோமவன்சவுடன் சேர்ந்து ரில்வின் பல மாவட்டங்களுக்குச் சென்றார். ஆனால்,. தேர்தல் முடிவுகள் பலத்த ஏமாற்றத்தை்தந்தது. வெறுமனே 273, 428 (4.19 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெற்று விஜேவீர மூன்றாவதாக வந்தார்.
1983 கறுப்பு ஜூலை
தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை தொடர்ந்து இன்னொரு அதிச்சியும் காத்திருந்தது. 1983 ஜூூலயில் தமிழர்களுக்கு எதிராக நாடுபூராவும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு பிறகு ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அந்த வன்முறைகளுக்காக இடதுசாரிக் கட்சிகளை தவறான முறையில் குற்றஞ்சாட்டியது.
கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜ கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளே தடை செய்யப்பட்டன. சில மாதங்களுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவசமசமாஜ கட்சி மீதான தடை நீக்கப்பட்ட அதேவேளை ஜே.வி.பி. மீதான தடை தொடர்ந்தது.
ஜனநாயக அரசியல் நிரோட்டத்தில் பிரவேசித்த ஜே.வி.பி. தலைமறைவாக இயங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. அதற்கு எதிராக 1985 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
ஜே.வி.பி.யை பொறுத்தவரை, அது மிகவும் நெருக்கடிமிக்க – இருள்சூழ்ந்த காலப்பகுதியாக அயைந்தது. நெருக்குதலின் காரணமாக தளர்ந்துபோன பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் இயக்கத்தை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்தும் உறுதியாக நின்று ஜே.வி.பி.க்காக பாடுபட்டவர்களில் சோமவன்சவும் அவரின் உதவியாளரான ரில்வின் சில்வாவும் அடங்குவர். சோமவன்ச சிறிஐயா மற்றும் றெஜி மாமா அங்கிள் என்ற பெயர்களிலும் ரில்வின் சுசில் என்ற பெயரிலும் இயங்கினர்.
களுத்துறை மாவட்ட செயலாளர்
பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும், தலைமறைவாக செயற்பட்ட இயக்கத்திற்குள் ரில்வினின் அந்தஸ்து வளர்ந்தது. 1987 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ரில்வின் களுத்துறை மாவட்டத்தின் ஜே.வி பி. செயலாளராக நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் மத்திய குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
1987 ஜூலையில் கைச்சாத்தான இந்திய — இலங்கை சமாதான உடனபடிக்கையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவத்தின் பிரசன்னமும் இலங்கையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தன. உடன்படிக்கைக்கு எதிராக ஜே.வி.பி. வன்முறைப் போராட்டத்தை. முன்னெடுத்தது. இரகசியமாக பெரியளவில் அது ஆயுதங்களை சேர்க்கத் தொடங்கியது. இயக்கத்துக்காக ஆயுதங்களைச் சேர்ப்பதில் ரில்வினும் ஈடுபட்டார்.
சுசிலும் சுஜாதாவும்
அதேவேளை, காதலும் மலரத்தொடங்கியது. சுஜாதா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெவிநுவரவைச் சேர்ந்த சீதா எதிரிவீர ஜே.வி.பி.யின் உயர்பீடத்தினால் களுத்துறைக்கு இடமாற்றப்பட்டு மாவட்டத்தின் மகளிர் அணியின் பொறுப்பாளர்க முழுநேர செயற்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். சுசிலும் சுஜாதாவும் நாளடைவில் காதில் விழுந்தனர். 1987 அக்டோபரில் இருவரும் திருமணம் செய்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் செப்டெம்பரில் எதிர்பாராதது நடந்தது.
வாதுவையில் கைது
ஆயுதங்களை கடத்திக்கொண்டு வந்தவேளையில் ரில்வினும் இயக்கத்தின் வேறு மூன்று உறுப்பினர்களும் பாணந்துறைக்கு அண்மையாக வாதுவையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எதிர்த்துச் சண்டையிடவில்லை. அப்போது ஆயதங்களை சேகரித்துக்கொண்டு மாத்திரம் இருந்ததாகவும் பொலிசாருடன் மோதுவதற்கு தயாராக இருக்கவில்லை என்றும் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ரில்வின் கூறினார். கைதும் அதைத் தொடர்ந்து தடுப்புக்காவலும் ரில்வினின் வாழ்க்கையை மாற்றியமைத்தன. அதற்கு பிறகு நடந்தவற்றை இந்த கட்டுரையின் இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.
டி.பி.எஸ். ஜெயராஜ்


