Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வெள்ளை உடைக் கொலையாளிகள் நாம்

மனிதர்கள் உயிரோடு இருக்கும்போதே குறைந்தபட்சம் அன்பு செலுத்துவோம். இந்த வாழ்வு ஒருமுறைதான். இறந்தபின் அழுவதில் எந்தப் பயனும் இல்லை.

குட்டி என்ற தனிமனிதன் காவல்துறையால் கொலை செய்யப்பட்டதற்கு, அறவழியிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நீதிவிசாரணை கோரி, வெள்ளை நிற உடையுடன் அமைதியாகப் புலம்பெயர் ஈழத் தமிழ் சமூகம் ஆயிரம் பேருக்கும் மேல் கூடி, எங்களுடைய சமூக ஒருமைப்பாட்டைக் காட்டிப் பெருமையடைந்து கொண்டிருக்கின்றோம். எனக்குள் ஒரு பெரும் கேள்வி உள்ளது. உண்மையில் அந்தக் காவலாளிதான் குட்டியைக் கொன்றானா? அல்லது இல்லையா? இந்தக் கேள்விக்கான பதிலை நீதிமன்றம் வழங்கலாம். ஆனால் தனிமனித மனிதப் பண்புகளின் சிதைவுக்கும் அழிவுக்கும் அந்தச் சமூகம் பொறுப்பேற்க வேண்டாமா?

கடந்த காலங்களில் புலம்பெயர் ஈழத் தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த பல கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் (என் பார்வையில் தற்கொலையும் சமூகக் காரணிகளால் நிகழும் ஒரு கொலையே) நாம் சமூகமாகப் பொறுப்பேற்று அதன் காரணிகளை ஆராய்ந்தோமா? அவற்றைப் பற்றிய திறந்த சமூக உரையாடல்களை நடத்தியோமா? மனவள ஆற்றுப்படுத்தலுக்கான முயற்சிகளை மேற்கொண்டோமா? இல்லவே இல்லை.

நாங்கள் கூறித் தப்பித்ததெல்லாம், அவனுக்கு கடன் பிரச்சனை, அவனுக்கு குடும்ப பிரச்சனை, விசா பிரச்சனை, காதலி பிரச்சனை என்பதுதான். உண்மை அதுதானா? இல்லவே இல்லை. உரையாடலுக்கும் புரிதலுக்கும் பரிவற்ற உறவுகளாலும், சமூகப் புறக்கணிப்பாலும் தனிமையாக்கப்பட்ட குட்டி என்ற மனிதன் இன்று இறந்து கிடக்கிறான். ஒரு வருடத்திற்கு முன் விவாகரத்தான அவனது மனைவி, இறந்தவனின் முன் தனது பிள்ளைகளுடன் வந்து குளறிக் குளறி அழுகிறாள். இப்படியான எத்தனை மனிதர்களை எமது தமிழ்ச் சூழலில் பார்க்கின்றோம்? அதன் ஒரு வடிவம்தான் வெள்ளையுடை போராட்டமும். ஆனால் உயிரோடு இருந்தபோது அவனது தனிமையையும் வலியையும் யார் கேட்டார்கள்? அதற்காக எம்மிடமுள்ள சமூகக் கரிசனைதான் என்ன? சமூக அமைப்புதான் என்ன?

ஒருபுறம் மனநலச் சிகிச்சை, மறுபுறம் இருபது அடி × இருபது அடி அறைக்குள் அடைக்கப்பட்ட தனிமை. இவை இரண்டும் சேர்ந்து அவனை மெதுவாகச் சிதைத்திருக்கலாம். உறவுகளின் முறிவு, உணர்ச்சி ஆதரவின்மை, புலம்பெயர் வாழ்வின் அழுத்தங்கள், சமூக உரையாடலின் பற்றாக்குறை, மனநலத்தைப் பற்றிய களங்கப்படுத்தல், மனிதனை மனிதனிடமிருந்து அந்நியப்படுத்தும் வாழ்க்கைமுறை ஆகியவற்றை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.

எனவே கேள்வி, “அவன் எப்படி இறந்தான்?” என்பதல்ல. “அவன் உயிரோடு இருந்தபோது அவன் ஏன் இவ்வளவு தனியாக விடப்பட்டான்?” என்பதுதான். அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடாமல், அடுத்த குட்டியின் மரணத்திற்கான பாதையை நாம் அமைத்துக் கொண்டே இருக்கிறோம். சமூகமாக நமது பொறுப்பு குற்றவாளியை மட்டும் தேடுவது அல்ல; மனிதர்களை இந்த நிலைக்குத் தள்ளும் சமூக மற்றும் உளவியல் காரணிகளையும் கண்டறிந்து, அவற்றைப் பற்றிய நேர்மையான உரையாடலை ஆரம்பிப்பதுமாகும்.

மனிதர்கள் உயிரோடு இருக்கும்போதே குறைந்தபட்சம் அன்பு செலுத்துவோம். இந்த வாழ்வு ஒருமுறைதான். இறந்தபின் அழுவதில் எந்தப் பயனும் இல்லை. இதை விளங்காதவர் யாருமில்லை. ஆனால் செயல்படுத்துவதில் ஈகோ.

- ப. பார்தீ