வட மாகாண மகளிர் விவகாரம், வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.
கைதடி அரச முதியோர் இல்லத்துக்கான நோயாளர் காவு வண்டியின் திருத்தப் பணிகள் மற்றும் அதன் அவசர தேவைப்பாடு தொடர்பில் கூடுதல் கவனம்
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15) திங்கட்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். எனவே, திட்டங்கள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கொள்வனவு நடவடிக்கைகளை ஆண்டிறுதி வரையில் இழுத்தடிக்காது, எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும்,' எனப் பணிப்புரை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின்போது, திட்டங்களுக்குரிய பயனாளிகள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான உதவித் திட்டங்களை விரைந்து வழங்கி முடிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சின் செயலாளர், அடுத்த மாத இறுதிக்குள் கொள்வனவுப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதனைத் தொடர்ந்து திட்டங்களை மிக விரைவில் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார். இதன்போது குறித்த அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்றிட்டங்களும் தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டன: கூட்டுறவுத் திணைக்களத்துக்கு நிதி ஆணைக்குழுவால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட சில திட்டங்களுக்குரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி விரைவாக நிறைவு செய்யுமாறு ஆளுநர் பணித்தார்.
தொழிற்துறைத் திணைக்களத்தினூடாகத் தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், தொழிற்துறைத் திணைக்களம் எதிர்காலத்தில் தனித்துவமான மற்றும் புத்தாக்கமான சிந்தனைகளுடன் செயலாற்றுவதற்கு ஏதுவாக, ஏனைய மாகாணங்களில் இத்திணைக்களத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பில் ஆராயுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழான கைதடி அரச முதியோர் இல்லத்துக்கான நோயாளர் காவு வண்டியின் திருத்தப் பணிகள் மற்றும் அதன் அவசர தேவைப்பாடு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விளம்பரங்கள் கோரப்படும்போது, எவரும் விண்ணப்பிக்காததால் ஏற்படும் நடைமுறை நெருக்கடிகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், சம்மந்தப்பட்ட அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, திட்டமிடல்), ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


