சலேவுக்குச் சித்திரவதை என்பது முற்றிலும் பொய் -பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கம்!
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சந்திப்பு – சுரேஷ் சலே விவகாரத்தில் CID முடிவு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து தற்போதைய அரசால் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படுவது எவ்விதமான அரசியல் பழிவாங்கல் நோக்கங்களுக்காகவும் அல்ல என்றும், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே சிறைச்சாலையில் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார் என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசின் புதிய விசாரணைகள் மற்றும் சிறைச்சாலை நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு விசேட விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சட்டதிட்டங்களுக்கு அமைய முறையாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்னணியில், அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் போலி வதந்திகளாகும்.
அவருக்கு அண்மையில் பல் மற்றும் கண் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, அதற்கான முறையான மருத்துவச் சிகிச்சைகள் உடனடியாக அரச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளன. அவர் துன்புறுத்தப்படுவதாக இருந்தால் ஏன் உடனடியாக மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ வேண்டும். அதுமட்டுமன்றி, அவரது குடும்பத்தினர் அவரை நேரில் சந்திப்பதற்கும், வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டு வந்து கொடுப்பதற்கும் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் கண்டறிவதே இந்த மறுவிசாரணையின் பிரதான நோக்கமாகும். இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீடு காணப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விரிவான புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - என்றார்.
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சந்திப்பு – சுரேஷ் சலே விவகாரத்தில் CID முடிவு!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு, நாளாந்தம் சட்டத்தரணி உதவியை வழங்குவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது. சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலேவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் 5 நாட்களும் சலே தமது சட்டத்தரணி அசித சிறிவர்தனவைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு மனோரி சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அதன் பணிப்பாளர் ஷானி அபேசேகர இந்த விபரத்தை அறிவித்துள்ளார். சுரேஷ் சலே தற்போது விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் சட்ட ஆலோசனைகளைப் பெற வேண்டிய அவசியம் எழவில்லை என்று அந்தக் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்தரணியைத் தொடர்ச்சியாகச் சந்திப்பதன் மூலம் சந்தேகநபருக்குத் தேவையான மன அமைதி (ஓய்வு) இல்லாது போய், அவரது சுகாதார நிலைக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாத்திரம் சட்டத்தரணி அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மனோரி சலேவுக்கு அனுப்பிய கடிதத்தில் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சலேவின் சட்டத்தரணியான அசித் சிறிவர்தனவுக்கு ஒவ்வொரு புதன்கிழமையன்று மாத்திரம் சலேவைச் சந்திக்க அனுமதி வழங்க முடியும் என்றும், குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு தினமும் அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், சட்டத்தரணி சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க முடியாது என்றும் அவர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததன் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


